பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்33

சொல்வதால் இச்சொற்கள் நம்முடையன வல்ல என்று நம் அறி யாமையாற் கருதி வந்தது போலவே இந்தப் பம்புளியும் நம்முடைய தன்று என்று கருதிவிட்டேன். நம் ஊருக்கு வந்த பிறகுதான் அது நமக்குரியது என்றும், அழகிய தமிழ்ப் பெயர்தான் அவ்வாறு மருவி மயக்கத்தைச் செய்து விட்டது என்றும் அறிந்தேன்.

அவ்விளக்கம், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை யவர்களாற் பெற்றேன். பசிய சோலைகள் நிரம்பிய இடமாதலின் பைம்பொழில் என்று நல்ல பெயரிட்டுள்ளனர் நற்றமிழர். வழித் தோன்றல்களாகிய நாம் அதனைச் சிதைத்துச் சீரழித்து பம்புளி யாக்கி விட்டோம். நல்ல வேளை! பம்புளி என்பது தமிழ்ப் பெயராக இல்லை; அதனால் இது தமிழர் களுக்கு உரியதன்று என்று சட்டமாக்கிப் பிறருக்குத் தாரை வார்க்காமல் போனோமே!

இதனாற்றான் தமிழ்ப் பெயர்களை மாற்றிப் பிற பெயர்களால் அழைப்பதும் சிதைத்து வழங்குவதும் கூடா தென்று பன்முறை கூறி வந்துள்ளேன். சொற்களைச் சிதைத்து வழங்குவதால் பெருந்தீங்குகள் நேர்ந்து விடும் தம்பி. நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

சரி; நான் எழுதியவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, நன்முறையில் நடந்து, நான் குறிப்பிட்டுள்ள இடங்களை யெல்லாம் கண்டுகளித்து இன்பத்துடன் திரும்புக. நீ அங்குச் செல்லும் பொழுது, புலியருவிப் பெயர்க் காரணத்தை அங்கு எவரேனும் கூறக் கேட்டால் ஊர் திரும்பியதும் எனக்கெழுது.

இக் குற்றாலத்தைக் கண்டு வந்ததிலிருந்து எனக்கு ஒரு பெருமகிழ்ச்சியும் உண்டு. என்றுமுள தென்றமிழுக்கும் அத் தமிழ் போலவே இன்பஞ் செய்யும் தென்றலுக்கும் தாயகம் என்று புகழப்படும் பெருமையும், பிற மலையிடங்களிற் காணப்பெறா அருவிப் பெருமையும், ஏனை வளமும் நலமுங் கொண்ட இக் குற்றாலமும் நல்ல வேளையாக, நம்மைப் புறக்கணித்து விட்டு, வேறு பிறரைச் சென்று சரண்புகாது நம்மிடமே இருந்து வருகிற தென்ற பெரு மகிழ்ச்சிதான் அது. அந்தப் பெருமிதத்துடன் ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

நீ குற்றாலம் சென்று மீண்டதும் விவரமாக எழுது. உன் கடிதம் கண்டு வேறு செய்திகள் எழுதுவேன்.

12.09.1956

உன் தந்தை
முடியரசன்

