பக்கம் எண் :

38கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

9
பொருள் மாறிவரும் சொற்கள்

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். அம்மடலில் 'தேர்வு, நன்கு எழுதி யுள்ளேன்'. எனினும் இரண்டு மூன்று கேள்விகள் புரியவில்லை' என எழுதியிருக்கின்றாய். அதைப் படித்தவுடன் சில சொற்களைப் பற்றி எழுத முனைந்தேன். கேள்வி, புரிதல் என்ற சொற்கள் பற்றியே எழுதுகிறேன். பண்டை இலக்கியங் களில் அச்சொற்கள் எவ்வெப் பொருள்களில் வந்துள்ளன; இன்று அவை எப்பொருளில் வழங்கப் படுகின்றன? என்பதை நீ அறிந்து கொள்வது நலம்.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன்"- (புறம் - 72)

எனப் புறநானூற்றில் வரும் வரிகளுக்கு, மிகுந்த சிறப்பினையும் உயர்ந்த கல்வியறிவினையும் உடைய மாங்குடி மருதன் என்று பொருள். இங்கே 'கேள்வி' எனும் சொல் கல்வியறிவு அல்லது நூலறிவு எனப் பொருள்படுகிறது.

'ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கில் நவிலப் பாடி" - (திருமுரு - 186)

என்று திருமுருகாற்றுப் படையில் வரும் வரிகளுக்கு, 'ஆறெழுத்தி னைத் தன்னிடத்தே அடக்கியிருக்கிற, மறைய உச்சரிக்கப்படும் (நமோ குமாராய) என்னும் மந்திரத்தை' எனப் பொருள் எழுதுவர் உரையாசிரியர். இங்கே 'கேள்வி' எனுஞ் சொல் மந்திரம் எனப் பொருள்படுகிறது.

"வேய்வை போகிய விரல்உளர் நரம்பிற்
கேள்வி போகிய" - (பொருநர் - 17)

என்று பொருநராற்றுப் படையில் வரும் வரிகளுக்கு 'குற்றமற்ற விரலால் அசைக்கும் நரம்பினையுடைய இசை முற்றுப் பெற்ற"