பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்39

என்று உரையாசிரியர் பொருள் கூறுவர். ஆதலின் இவ்விடத்தே 'கேள்வி' என்னும் சொல் இசையென்று பொருள்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படையில் வரும் 'தொடையமை கேள்வி இடவியற் றழுவி" (பெரும் -16) என்னும் வரியில் 'கேள்வி' என்னும் சொல்லுக்கு யாழ் என்று பொருள் கூறுவர்.

பதிற்றுப் பத்து என்னும் நூலில் 'சொற்பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் (பதிற்-21) என்னும் வரியில் வரும் 'கேள்வி' க்கு வேதம் என்று பொருள் கூறுவர்.

திருக்குறளில் கேள்வியென்ற அதிகாரத்தில்,

"செவியுணவிற் கேள்வி யுடையாற் அவியுணவி
ஆன்றாரோ டொப்பர் நிலத்து" - (413)

என்னும் குறட்பாவில் வரும் 'கேள்வி' செவியுணவாகிய கேள்வியறிவு எனப் பொருள்படுகிறது. அஃதாவது நல்லோர் கூறும் அறவுரைகளை, அறிவுரைகளைச் செவியாற் கேட்பது என்பது பொருள்.

"கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி" - (418)

என மற்றொரு குறளும் உண்டு. இதற்குக் கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான துளை கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடை யனவே என்று பொருள்.

இவ்விரு குறட்பாவாலும் 'கேள்வி' என்னுஞ் சொல்லுக்குச் செவிப் பொறியின் தொழிலாகிய கேட்டல் என்பதுதான் பொருள் எனவுணர்கிறோம். இதுவரை எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள் களால் 'கேள்வி' என்னுஞ் சொல்லுக்குக் கல்வியறிவு, மந்திரம், இசை, யாழ், வேதம், செவியாற் பெறப்படும் கேள்வியறிவு - என்னும் பொருள்கள் உண்டு எனத் தெரிந்து கொண்டோம்.

ஆனால் இப்பொழுது, கேள்வி என்னுஞ் சொல் வினா என்னும் பொருளில் வருவதைக் காண்கிறோம். இது பெரும் பான்மை வழக்காகிவிட்டது. நீயும் உன் மடலில் அப்பொருளில் தான் வழங்கியிருக்கிறாய். பள்ளிகளில் கல்லூரிகளில் வினாத்தாள் என்று கூறுதற்கு மாறாகக் கேள்வித்தாள் என்றுதான் பெரும்பாலாக