பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வழங்கி வருகிறோம். 'வாய்விட்டுக் கேட்டான்; நான் கொடுத்து விட்டேன்' என்று மக்கள் பேச்சு வழக்கிலும், வினவுதல், வேண்டுதல் என்னும் பொருளிற்றான் கேள்வி யென்னுஞ் சொல் வருகிறது.

"தட்டுங்கள் திறக்கப்படும்
              கேளுங்கள் கொடுக்கப்படும்"

என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்டிருப்பாய். இங்கே 'கேளுங்கள்' என்ற சொல் எப்பொருளில் வருகிறது? வாயினாற் கேளுங்கள் என்றுதானே பொருள்? ஆகவே, முதலிற் செவியின் தொழிலாக இருந்த 'கேட்டல்', பிற்காலத்தே வாயின் தொழிலாகிய வினவுதல் வேண்டல் என்னும் பொருளுக்கு மாறிவந்துவிட்டது. காலப்போக்கு இவ்வாறு மாற்றத்தைத் தந்துவிட்டது. இவ்வாறு வழங்குவது தவறு எனச் சிலர் கூறுவர். செவியின் தொழிலை வாயின் தொழிலாகக் கூறுவது சரியா தவறா எனத் தெரிந்து கொள்வது நல்லது.

சரி என்பதுதான் என் கருத்து. நாம் இப்படி வழங்குவதற்கு முன்னரே, மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், வாயின் தொழி லாகவே, கேட்டல் என்னுஞ் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார். உதயகுமரன் அம்பலம் புக்க காதையில் அவ்வாறு பயன்படுத்தி யுள்ளார். மணிமேகலையிடம் உதய குமரன் சென்று உரையாடும் பகுதி அது.

"யானே கேட்டல் இயல்பெனச் சென்று
நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப"

என அவன் கூற்றாக வரும் பகுதியில், 'கேட்டல்', 'கேட்ப' என்று இரண்டிடத்தில் வருகிறது. "நானே கேட்பதுதான் இயல் பென்று அவளிடம் சென்று, ஏன் தவக்கோலம் பூண்டனை? கூறுவாயாக என்று துணிந்து கேட்க" என்பது பொருள். அவ்விரண் டிடத்தும் வாயின் தொழிலாகவே அஃதாவது வினவுதற் பொருளாகவே வருகிறது.

மேலும் மணிமேகலை கூற்றாகக் 'கேட்டது மொழிவேன்' என்றும் வருகிறது. 'உதயகுமரனே நீ வினவியதற்கு விடை கூறுவேன்' என்பது பொருள். கேட்டது என்னுஞ்சொல் வினவியது என்று பொருள்படுகிறது