ஆக, மணிமேகலைக் காப்பிய காலத்திலேயே கேள்வி எனுஞ் சொல் வாயின் தொழிலாக வினா என்னும் பொருளில் மாறி வழங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. அதனால் நாமும் வினவுதற் பொருளில் கேள்வி யென்னுஞ் சொல்லை வழங்குவது குற்றமாகாது எனக் கருதுகிறேன். அடுத்துப் 'புரிதல்' என்னுஞ் சொல்லைப்பற்றி ஆய்வோம். முன்னைப் பொருள் என்ன? இற்றைப் பொருளென்ன? எனக் காண்போம். "இடிபுரிந்து எள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்" - (குறள் 607) என்ற குறட்பாவில், 'மடிபுரிந்து' என்னுந் தொடர்க்குச் சோம்பலை விரும்பி என்று பொருள். இங்கே 'புரிந்து' என்னுஞ் சொல் விரும்பியெனப் பொருள்படுகிறது. "ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை" - (குறள் 541) இக் குறட்பாவில் 'இறைபுரிந்து' என்பதற்கு 'நடுவுநிலைமை பொருந்தி' என்பது பொருள். இங்கே 'பொருந்தி' என்று பொருள் படுகிறது. 'புரிஞெகிழ் முல்லை' இத்தொடர்க்கு முறுக்க விழ்ந்த முல்லை என்று பொருள். இங்கே புரி என்ற சொல் முறுக்கு என்ற பொருள் படுகிறது. 'அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து' - (புறம் 35) என்ற புறநானூற்று வரிக்கு அறக்கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற என்று பொருள். இங்கே 'புரிந்த' என்பது 'ஆராய்ந்த' என்று பொருள் தருகிறது. 'அழல் புரிந்து அடர் தாமரை' - (புறம் 29) என்ற புறப் பாட்டு வரிக்கு, எரியால் ஆக்கப்பட்ட தாமரை என்பது பொருள். ஈண்டுப் புரிந்த என்ற சொல் ஆக்கப்பட்ட எனப் பொருள்படுகிறது. ஆக, இதுகாறும் கூறியவற்றால் 'புரிதல்' என்னுஞ் சொல் விரும்புதல், பொருந்துதல், முறுக்குதல், ஆராய்தல், ஆக்கப்படுதல் என்னும் பொருள்களைத் தரும் என அறிகிறோம். |