42 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
இனி, இன்று எப்பொருளில் அச்சொல் வழங்குகிறது எனக் காண்போம். ஆசிரியர் மாணாக்கர்க்குப் புரியும்படி பாடம் சொல்கிறார். இங்கே புரியும்படி என்றால் விளங்கும்படி என்று பொருள். புரியாதவன் என்றால் விளங்காதவன் என்று பொருள். இவன், இதைப் புரியாமல் செய்து விட்டான் என்ற விடத்து, விளங்காமற் செய்து விட்டான் என்பது பொருள். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இவனுக்குப் புரியவில்லை என்ற விடத்தும், விளங்கவில்லை என்று பொருள். அதனால் நம் காலத்தே புரிதல் என்ற சொல், நன்கு விளங்கிக் கொள்ளுதல் அஃதாவது விளக்கமாகத் தெரிந்து கொள்ளுதல் என்னும் பொருளில் வழங்குவதை நாம் புரிந்து கொள்ளுகிறோம். இவற்றோடு 'தூங்குதல்' என்ற சொல்லைப் பற்றியும் இப்பொழுது விளக்குவது நல்லது என்று கருதுகிறேன். 'ஓங்கு சினைத் தூங்கு துயில்பொழுதின்' - (நற்-87) என்ற நற்றிணைப் பாடல் வரிக்கு, வௌவால் உயர்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டே துயிலும் வேளையில் என்பது பொருள். இங்கே தூங்கு என்ற சொல், தொங்கிக் கொண்டு என்று பொருள் படுகிறது. 'தூங்கு கையான் ஓங்கு நடைய - (புறம் 22) என்றவிடத்துத் தொங்குகிற துதிக்கையுடன் ஓங்கிய நடையை உடைய (யானை) என்று பொருள். இவ்விடத்தும் தொங்குதல் என்ற பொருளில் வருகிறது அச்சொல். 'பெயல் ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்' - (அகம் 158) என்ற அகநானூற்று வரி, 'மழை பெய்தல் நீங்கி, ஒலியடங்கிய செறிந்த இருளையுடைய நள்ளிரவு' எனப் பொருள் தருகிறது. இங்கே 'தூங்கிருள் என்பதற்குச் 'செறிந்த இருள்' என்பது பொருள். தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு' - (குறள் 383) என்னுங் குறளில் 'தூங்காமை' என்னுஞ் சொல் 'சோம்பலின்றி விரைந்து செயலாற்றுந் தன்மை' எனப் பொருள் தருகிறது. '' தூங்குக தூங்கிச் செயற்பால' - (குறள் 672) என்ற குறளில் வரும் 'தூங்குதல்' என்னுஞ் சொல் காலந்தாழ்த்துச் செய்யும் சோம்பல் எனப் பொருள்படுகிறது. |