பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்43

இம் மேற்கோள்களால் தூங்குதல் என்ற சொல் செறிதல், தொங்குதல், சோம்புதல் என்னும் பொருள்களில் பண்டு வழங்கப் பட்டு வந்தமை தெரியவருகிறது.

அச்சொல், இன்று எப்படிப் பொருள்மாறி வருகிறது என்பதைக் காண்போம். 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?' என்ற பாடலை நீ கேட்டிருப்பாய். மோனநிலை பற்றிக் கூறும் இவ்வரியில் 'தூங்குதல்' எனுஞ் சொல் உறங்குதல் என்ற பொருளில் வருகிறது.

'தூங்காதே தம்பி தூங்காதே' இது நாடறிந்த திரைப்படப் பாடல். ஈண்டும் உறக்கம் என்ற பொருளிற்றான் வருகிறது. அச்சொல், தூக்கம் சொக்குகிறது, தூங்குமூஞ்சி என்று பேச்சு வழக்கில் உறக்கம் என்ற பொருளிலேதான் வருகிறது. சொற்கள் காலப்போக்கில் எப்படியெப்படியெல்லாம் பொருள் மாறி வரு கின்றன என்பதை நீ தூங்காமலிருந்து ஆய்ந்து தெரிந்து கொள்.

இவற்றைத் தெரிந்து கொண்டது போலவே நாற்றம், குப்பை, கண்ணோட்டம், இறும்பூது போன்ற சொற்கள் முன்பு எப்பொருளிற் கையாளப்பட்டன; இப்பொழுது எப்பொருளிற் கையாளப்படு கின்றன என்பதை நீயே சிந்தித்துப் புரிந்து கொண்டு எனக்கு எழுது.

உன் தந்தை
முடியரசன்

