44 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
10 சொற்றமிழ்பாடு அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். அங்கேவுள்ள மெய்ஞ்ஞான சபையில் இறையடியார் ஒருவர் பேசியது பற்றி எழுதியிருந்தாய். 'தமிழில் வழிபாடு செய்தல் கூடாது; செய்தால் இறைவன் செத்து விடுவான்' என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார் என எழுதியிருந்தாய். எனக்கு நகைப்பும் எரிச்சலும் மாறி மாறித் தோன்றின. அவ்வாறு பேசியவர் தமிழர்தானா என்ற அய்யம் ஏற்பட்டது. அவரைத் தமிழச்சிதான் பெற்றனளா என்று வியப்புற்றேன். அடுத்து, அவர் இறைவனை நம்புகிறவர்தானா என்றும் ஐயுற்றேன். ஏனெனில் இறைவன் செத்துவிடுவான் என்று சொல்கிறாரே, இறைவனுக்கு இறப்புண்டா? இறப்பு அவனுக்கு உண்டென்றால் அவன் இறை வனாக முடியுமா? பேசியவர்தம் பேதைமை புலப்படுகிறதே தவிர அப்பேச்சில் உண்மையோ, பக்தியோ இருப்பதாகத் தெரிய வில்லை. நாம் தமிழ் வழிபாடு வேண்டுமென்று எந்த நாட்டிற் கூறுகின் றோம்? தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற தமிழ் நாட்டுக் கடவுளர்க்குத் தமிழ் நாட்டிலே தமிழ் வழிபாடு வேண்டுமென்று விளம்புகின்றோம். இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலோ, இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ, சப்பானிலோ தமிழ் வழிபாடு வேண்டுமென்று கூறவில்லை. நம் வேண்டுகோளைப் பிற மாநிலத் தாரோ பிறநாட்டினரோ எதிர்க்கவில்லை. நம் நாட்டினரே எதிர்க்கின்றனர். இந்நிலை கண்டு இரங்குவது தவிர வேறென்ன செய்ய இயலும்? சைவப் பெருமக்கள் உச்சிமேல் வைத்துப் போற்றுகின்ற பெரிய புராணத்தில், |