பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்45

'அர்ச்சனை பாட்டே யாகும்
ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயான்'

என்று ஒரு பாடற் பகுதி வருகிறது. அதில் தமிழ்ப் பாட்டால் என்னை அருச்சித்து வழிபடு என்று சிவபெருமானே கூறியதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறிருந்தும் நம் பச்சைத் தமிழர், தமிழைக் கேட்டால் இறைவன் செத்து விடுவான் என்று கூறுகிறாரே! அவருடைய பக்தியை, அறிவை ஐயுற வேண்டியுளது.

1958-ஆம் ஆண்டு, 'எழில்' என்ற இதழில் 'பாண்டிநாடன்' என்ற புனைபெயரில் இரண்டு கட்டுரைகள் கதைபோல எழுதி யிருந்தேன். அவற்றை இப்பொழுது உனக்கு அப்படியே எழுதுகிறேன். அவற்றைப் படித்து, நன்கு சிந்தித்து, நீயே ஒரு முடிவுக்கு வா. இதோ அக் கட்டுரை

திருக்கயிலையில் ஒருநாள் சிவபெருமான் அந்தப்புரத்தில், மிக விரைவாக நுழைந்து கொண்டிருந்தார். நுழையும் பொழுதே, 'கயல்விழி! கயல்விழி! என்று தன் துணைவியாரை அழைத்துக் கொண்டே நுழைந்தார்.

'ஏது, அழைப்பு தடபுடலாக இருக்கிறதே இன்று! காரணம் என்ன? எப்போதும் பர்வதராஜகுமாரி என்று வாயாரக் கூப்பிடு வீர்களே! இன்றைக்கு திடீரென்று புதுப்பெயரால், கயல்விழி என்றழைக்கின்றீர்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! சரி, களைத்து வந்திருக்கிறீர்கள்; அப்படி புஷ்பாசனத்தில் அமருங்கள்' என்று பணிவன்புடன் கூறினர் பார்வதி அம்மையார்.

'அமர்கிறேன்; புஷ்பாசனம் என்று இனிப்புகலாதே, மலரணை என்றே அதைச் சொல்' என்று பரமன் கூறிக்கொண்டே அங்கிருந்த மலர்ப் பஞ்சணையில் சென்றமர்ந்தார்.

'சுவாமி! என்ன! உங்கள் பேச்சில் புது மாதிரியான வாடை தென்படுகிறதே?' என்ற ஓர் ஐய வினாவை விடுத்தனர், ஐயை.

'வாடை என்று சொல்லாதே வாள்விழி! தென்றல் என்று சொல், தெற்கே சென்று வந்தேன். தேன்தமிழ் மாந்தி வந்தேன். அந்தத் தேறல் என்னைத் தெளிதமிழில் பேசு பேசு என்று தூண்டுகிறது.