பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வேறொன்று மில்லை வேல்விழி! நீயும் அந்தத் தேறல் மாந்தினால் சுவாமி என்று என்னை அழைக்கமாட்டாய். தித்திக்கும் செந்தமிழால் வாயினிக்க, செவியினிக்கத் தேன்மொழி பேசி என்னை அழைப்பாய்' என்று களி கொண்டு பேசினர் கண்ணுதற் பெருமான்.

'என்னையும் அழைத்துக் கொண்டு செல்லாமல், தனியாகச் சென்று விட்டு இப்போது வந்து ஏதேதோ பேசுகிறீர்கள்' என்று ஊடல் கொண்டவர் போல உள்ளே சென்று பின் ஒரு குவளையுடன் திரும்பினர் உமையம்மை.

'இதோ! பானம்; தாக சாந்தி செய்து கொள்ளுங்கள்' என்று நிலம் நோக்கி நின்றனர் நீலமேனி வாலிழையார்.

பரமன் கேலிச் சிரிப்பை வாயோரத்திலே சிந்தவிட்டு, அக்குவளையை வாங்கிய வண்ணம், உயிரோவியமே! பானம் தாகம்-சாந்தி - இன்னும் இப்படிப் பேசுகிறாயே என்னிடம்? எனக்கு ஒரே ஒரு வேட்கைதான் இப்போது. அது தமிழ் வேட்கை. அந்த வேட்கை தீர மீண்டும் தெற்கே செல்லப் போகிறேன். சென்று வேட்கை தீரத் தமிழமுதை உண்ணப் போகிறேன்...'

'அதை என்னிடம் சொல்லி விட்டுப் போக வந்தீர்கள்? அவ்வளவுதானே? என்று இடை மறித்து ஊடி நின்றனர் உமையம்மை.

'மலைச்செல்வி! அந்த இன்பத்தை நீயின்றித் தனித்து உண்ணவா நான் எண்ணுவேன்? உன் எண்ணம் தவறு. உன்னையும் உடன ழைத்துச் செல்லவே ஓடோடி வந்தேன். வா, புறப்படு, காலந் தாழ்த்தாதே, ஒப்பனையெல்லாம் பின்னர்ப் பார்த்துக் கொள்வோம்' என்று விரைவுபடுத்தினார் பரமசிவன்.

'இதோ வந்துவிட்டேன் தனி முதல் தலைவா!' என்று உள்ளே ஓடினார் உமையம்மை. விளையாடச் சென்றிருந்த குமரன் ஓடி வந்தான். வந்தவன் தன் தாயும் தந்தையும் எங்கோ புறப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, அப்பாவைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு உள்ளே ஓடினான். அம்மாவிடம் 'அம்மா! நானும் வருகிறேன்' என்று கெஞ்சினான். 'சரி, வாடா' என்று அவனையும் அழைத்துக் கொண்டு வந்தனர் அன்னையார்.

'உன் இளைய மகனையும் இழுத்துக் கொண்டு வருகிறா யாக்கும்' என்று கேட்டார் பிறைசூடி.