பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்47

'நானா இழுத்துக் கொண்டு வருகிறேன். அவன் எப்படியோ தெரிந்து கொண்டு என்னிடம் வந்து கண்ணைக் கசக்கினான்...'

'உன் பிள்ளை எப்படியிருப்பான்? கண்ணைக் கசக்கினால் வெற்றி என்ற இரகசியம் அவனுக்குத் தெரியாமலா போகும்.'

'சரி, சரி, போதும், உங்கள் பிள்ளை உங்களைப் போலத் தானே இருப்பான். அவனுக்கு மட்டும் பிடிவாதம் இல்லாமலா போகும்? அதற்கு நானென்ன செய்வேன்?'

'சரி, எனக்கு விடை சொன்ன திருக்கட்டும், விரைவாகப் புறப்படு, உன் மூத்த பிள்ளையும் வந்துவிடப் போகிறான்.'

'ஏன், அவன் வந்தாலென்ன? குடி மூழ்கிப் போகுமோ? அவனுந்தான் வரட்டுமே'

'அடடா, கட்டாயம் வரவேண்டியதுதான். சின்னவனுக் காவது கொஞ்சம் நஞ்சம் தமிழ் வரும். கணேசன் வாயைத் திறந்தால் தமிழாக இருந்தாலும் வடமொழியாக இருந்தாலும் ஒரே பிளிறல் தானே! நீ வேண்டுமானால் இருந்து அந்தப் பிள்ளையை அழைத்துக் கொண்டு வா. நான்...'

'இல்லை; இல்லை; இதோ வந்துவிட்டேன் வந்து விட்டேன்' என்று சொல்லிக்கொண்டே குமரனையும் கையில் பிடித்துக் கொண்டு பரமனைப் பின் தொடர்ந்து சென்றனர் பார்வதி தேவியார். தமிழ்ச் சுவையைக் குடும்பத்துடன் கூட்டாகச் சேர்ந்துண்ணும் வேட்கையால் தெற்கே பாண்டிய நாடு வந்து மதுரையில் இறங்கினர். இறங்கி அங்கேயே தங்கித் தமிழ்ச்சுவை மாந்தினர்.

"தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள்
தடாதகா தேவிஎன் றொருபேர்
தரிக்க வந்ததுவும், தனிமுதல் ஒருநீ
சவுந்தர மாறன் ஆனதுவும்
குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர்
கொண்டதும் தண்டமிழ் மதுரம்
கூட்டுண எழுந்த வேட்கையால் எனில்இக்
கொழிதமிழ்ப் பெருமை யார் அறிவார்?

(மதுரைக் கலம்பகம் 92)