11 பைந்தமிழ்ப் பின் சென்றவன் அன்புள்ள அரசு, நான், சென்ற மடலில் சிவபெருமானும் அவன் குடும்பத்தினரும் தமிழை விரும்பும் இயல்பினர் என்றும் தமிழால் வைதாலும் அவர்களை வாழ வைப்பவன் முருகன் என்றும் எழுதியிருந்தேன். இனி திருமால் எப்படியென்று காட்ட விரும்புகிறேன். இது பற்றி முன்னர் 'எழிலி'ல் நான் எழுதியதையே எழுதுகிறேன். அதனையும் படித்து, ஆய்ந்து பார்! இதோ அது: மணமுள்ள மலர்கள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட பூங்கா அது. தவழ்ந்து வரும் தென்றலுக்கு மணமூட்டிக் கொண்டே யிருக்கும். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தரும் அந்தப் பூங்கா திருவெஃகா என்ற ஊருக்குத் தனி அழகைக் கொடுத்து வந்தது. வைகறைப் பொழுதிலே மூதாட்டி யொருத்தி அம்மலர் வனத்தி லிருந்து பூக் குடலையுடன் வெளி வருவாள். நாள் தவறாமல், தன் தள்ளாடும் பருவத்திலும் நடுங்கிக்கொண்டே தளர் நடையோடு பூக்குடலையுடன் செல்வதைப் பலமுறை அன்பரொருவர் பார்த்துக் கொண்டே வந்தார். பார்க்கும் போதெல்லாம் 'ஐயோ பாவம்! வயிற்றுப் பாட்டுக்காக இந்தப் பருவத்திலும் இப்படிப் பாடுபடு கின்றாளே? இவளுக்கு உற்ற துணை ஒருவரும் இலர் போலும்!' என்று தமக்குள்ளே எண்ணி வருந்துவார் அந்த அன்பர். வழக்கம் போல், மூதாட்டி ஒருநாள் குடலையுடன் பூங்காவி லிருந்து வெளிப்பட்டு வந்தாள்; கோலூன்றிய வண்ணம் தட்டுத் தடுமாறி, தளர் நடையினளாய் வந்து கொண்டிருந்த அவள் எதிரில் அந்த அன்பரும் தற்செயலாக வந்துகொண்டிருந்தார். சோர்ந்து ஒரு பக்கத்தில் அமர்ந்தாள் அந்த முதியவள். வந்த அன்பர் மனம் உருகி, 'மூதாட்டி! உனக்கு உறுதுணை ஒருவரும் இலரோ? இம் மூப்பிலும் |