| 50 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
ஏன் இப்படியெல்லாம் அலைகின்றாய்? இந்த மலர்களையெல்லாம் எங்கெடுத்துச் செல்கின்றாய்?' என்று பரிவுடன் வினவினார். 'ஐயா! எனக்குத் துணை யார் இருக்கிறார்கள்? அந்தத் தலைவன் தான் எனக்குத் துணை. இவ்வளவு காலத்தையும் ஒரு வகையாகக் கடத்திவிட்டேன். இன்னும் கொஞ்சநாள், பிறகு கண்ணை மூடிவிடுவேன். அதுவரை அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றிருக்கின்றேன். என்னால் முடிந்த தொண்டு இது தான், அதனால் அவனுக்கு இதை எடுத்துச் செல்கின்றேன்.' என்று மூச்சை நிறுத்தி நிறுத்திப் பேசினாள் அந்த முதியவள். 'தொண்டா? யாருக்குத் தொண்டு? யாருக்காக மலர்? இந்த முதுமையிலும் உனக்குள்ள கடமையுணர்ச்சியைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். தாயே, உன் தலைவனுக்கு உன் மீது இரக்கம் வரவில்லையா? மூப்படைந்த உன்னை மலர் கொண்டு வரச் சொல்கிறானே?' 'இரக்கம் இல்லாமலா இருக்கிறான்? அவன் கருணைக் கடலாயிற்றே! அவனா மலர் கேட்கிறான்! நான் விரும்பிக் கொண்டு செல்கிறேன். இந்தக் காலை மலரைத் தொடுத்து அந்தக் கண்ணணுக்குச் சூட்டி என் கண் குளிரக் காண் கின்றேன். மனம் குளிர்கின்றேன். அந்தக் குளிர்ச்சி என் தளர்ச்சியையெல்லாம் போக்கி விடுகிறது தம்பி! இந்தத் தொண்டு என் மனமுவந்த தொண்டு. அவனுக்கன்றி வேறு யாருக்குத் தொண்டு செய்யப் போகின்றேன்?' என்று அந்த முதியவள் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு, 'பாட்டி! எம்பெருமானுக்கா இம் மலர்மாலை? ஆ! ஆ! உன் உள்ளமும் அன்பும் என்னே! என்னே! எவருக்கு இத்தூய தொண் டுள்ளம் வாய்க்கும்? நின் பெருமையே பெருமை! என வியந்து கூறி, இப் பேருள்ளம் உடையவளுக்கோ இம் முதுமை? என எண்ணியவ ராய் இனிய பாடல் ஒன்று பாடிக் கைகுவித்து நின்றார். நரை மறைந்தது; கூன் நிமிர்ந்தது; நடுக்கம் நின்றது. முதுமை ஒழிந்தது. இளமை உருவெடுத்தது. முதியவள் இளம் பெண்ணாக அங்கு நின்றாள். அவளுக்கே தன்னை நம்ப முடியவில்லை. மீண்டும் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். விந்தையினும் விந்தையாக இருந்தது அவளுக்கு. |