புகழ்பாடி, தாமுண்டு தம் செயலுண்டு என்று திரிவோரை ஏன் இப்படியெல்லாம் பழித்துரைக்கின்றீர்! 'இஃது அக்குரலின் பணிந்துரை. 'அமைச்சரே! யார் இவர்? என் பேச்சுக்கெல்லாம் மறுப்பு ரைத்த வண்ணம் இருக்கின்றார்! 'அரசே! இவர் ஆழ்வாரின் உண்மை மாணவர்? ஆழ்வார் பாட மறுத்ததும் இவரை அழைத்து வந்தேன்.' 'ஆழ்வாரின் மாணவரா? அதுதான் இவருக்குக் கோபம் வருகிறது. அவருடைய உண்மை மாணவரென்றால் இவரே நம் மீது பாடலாமே. நான் ஏன் இளமையை விரும்புகின்றேன். உலக இன்பங்கள் இன்னும் நுகரவா? நுகர்ந்தது போதும். நாட்டுக்கு இன்னும் சில காலம் நன்மை செய்யலாம் என்ற ஆர்வந்தான். அதனால் இந்த மாணவரே பாடட்டும். அமைச்சரே! இவருடைய பெயர்? 'கணிகண்ணன்' என்று இவரை அழைப்பார்கள் அமைச்சர் மறுமொழி. 'நன்று; கணிகண்ணரே! எம் முதுமை நீங்கப் பாடல் ஒன்று நீரே பாடுக!' என மன்னன் உரைத்தான். 'மன்னர் மன்னா! பொறுத்தருள்க! எம் ஆசிரியர் விருப்பிற்கு மாறாக நாமும் நடவோம்' என அவர் மறுமொழி தந்தார். 'பார்த்தீரா அமைச்சரே! நான் முன்பே சொன்னேனே இது கட்டுக் கதை என்று. கிழவி குமரியாவதாம். இதில் ஏதோ சூது இருக்கிறது. உண்மை என்றால் இருவரும் ஏன் என் மீது பாட மறுக்க வேண்டும்? பொய்யென்று தெரிந்து விட்டால் அரச தண்டனை கிடைக்கும்! என்ற அச்சம்' இது மன்னன் கூற்று. 'வேந்தே! யாருக்கு அச்சம்? யாம் எவருக்கும் அஞ்சோம்; அஞ்சுவதுமில்லை; அஞ்ச வருவதுமில்லை. ஆண்டவன் ஒருவனே தலைவன். அவனுக்கே அஞ்சி நடப்போம்' கணி கண்ணன் புலவனல்லவா? அவன் பேச்சில் வீரம் கலந்திருந்தது. பல்லவன் சீற்றம் மிகுதியாகிவிட்டது. 'கணிகண்ணரே! ஒன்று, பாடியாக வேண்டும்; இன்றேல் எம் நாட்டைவிட்டு ஓடியாக வேண்டும்; இஃது எம் ஆணை'. |