பற்றி நீ கூறியது முற்றிலும் உண்மை. என் அன்பனுடைய திருவாய் மொழியிலே, தமிழ் மொழியிலே எனக்கு அளவு கடந்த பித்துத் தான். அந்தப் பித்துப் பிடித்த காரணத்தால் தான் நான் இப்படி நடந்து கொள்கிறேன். சரி, நேரம் ஆகிறது. நான் வருகிறேன் நீ இங்கேயே இரு' என்று சொல்லிக் கொண்டே நடந்தார். 'உயிரன்றி உடலை மட்டும் தனித்திரு என்று கூறுவது போல் இருக்கின்றது தங்கள் கூற்று. உங்கள் மனத்தையே பித்துப் பிடிக்கச் செய்கின்ற அந்தத் தமிழ் மொழிக்காக நானும் சிறிது துன்பப் பட்டால் தான் என்ன?' எனத் திருமகள் கெஞ்சினார். 'தேன்மொழி' உன்னோடு உரையாடி நான் வெல்லவா? சரி, வா' என்று இலக்குமி கையைத் தம் கையில் கோத்துக் கொண்டு வயல் வரப்பெல்லாம் கடந்து திருமழிசையார் சென்ற வழியே சென்றுவிட்டார். ******* "அமைச்சரே! நம் நாட்டில் என்றுமில்லா வறுமை இன்று வரக்காரணம் என்ன? நம் ஆட்சியில் குறையை முன்னரே கண்டு, குறை நீக்கி முறை செய்யாமல் ஏன் இருந்தீர்?" 'பல்லவ வேந்தே! நம் நாட்டை விட்டுத் திரு நீங்கி விட்டது'- 'ஏன்? நீங்கும் வரை ஏன் பேசாதிருந்தீர்?' 'மன்னர் பெரும! கணிகண்ணனை நாடு கடத்தினோம். அதனை அறிந்த திருமழிசையாழ்வாரும் கணிகண்ணன் பின் சென்றனர்; ஆழ்வார் பின்னே ஆராவமுதன் சென்றான்; அவன் பின்னே அலர்மேலு மங்கையும் ஏகினாள். இதற்கு யார் என்ன செய்ய இயலும்?" "அந்தோ! இப்படியாகும் என்று தெரியாது பிழைபுரிந்து விட்டோமே! வருக அமைச்சரே! நாமும் பின்னே சென்று மன்னிப்பு வேண்டித் திரும்ப அழைத்து வருவோம்" மன்னன், அமைச்சரும், வீரரும் புடைசூழ விரைந்து சென்றான். ஆழ்வாரைக் கண்டு வணங்கி, "ஐயன்மீர்! பிழை பொறுத்து, நாட்டுக்கு எழுந்தருள வேண்டுகிறேன்" என மன்றாடி நின்றனன். 'அன்பனே! என்னை வேண்டுவதிற் பலனில்லை. என் மாணவ மணி கணிகண்ணனை வேண்டிக் கொள். அவன் விருப்பத்தைப் பொறுத்தது இது' என விடையிறுத்தனர் ஆழ்வார். |