பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்57

12
எது குறுகிய மனப்பான்மை?

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். இம் மடலிலும் ஓர் ஐயம் எழுப்பி யுள்ளாய். மிக்க மகிழ்ச்சி. இப்படித்தான் ஒவ்வொன் றையும் கேட்டுக் கேட்டுப் புரிந்து கொள்ளவேண்டும். ஏன்? எதற்கு? எப்படி? என்று வினவத் தொடங்குகிறாய் என்றால் உண்மையை அறியும் ஆவல் முளைவிடுகிறது என்று பொருள். ஆக உன் உள்ளத்தில் உண்மையுணரும் நோக்கம் வேர்விடு கிறது. சிந்திக்கத் தொடங்கி விட்டாய் என்பது தெரிகிறது. எத்தனை ஐயம் எழுப்பினும் விளக்குவது என் கடமை. விளக்குகிறேன் கேள்.

'தமிழ், தமிழ் என்று சொல்லித் திரிவது குறுகிய மனப் பான்மையல்லவா? நாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விரிந்த மனப்பான்மையுடைய வரவாயிற்றே! அவ்வாறிருக்க நாம் துவேச மனப்பான்மை கொள்வது சரியா?' என்றெல்லாம் எழுதி யிருக்கிறார்.

முதலில் இது துவேச மனப்பான்மையன்று; அஃதாவது வெறுப்புணர்ச்சியன்று என்பதை நன்கு தெரிந்து கொள். குறுகிய மனப்பான்மையும் அன்று என்பதைப் பின்னர் எழுதுவேன். நீ தேர்வில் முதல்வனாக வெற்றி பெற வேண்டும்; முதற் பரிசிலும் பெறவேண்டும் என்று எண்ணுகிறாய்; அதன் பொருட்டுப் பகலிரவு பாராது படிக்கின்றாய்; இது மற்ற மாணவர் மீது கொண்ட வெறுப்புணர்வா? உன் வீட்டுக் கூரை மழையால் நீரொழுக்குக் காண்கிறது. பழுது பார்த்துக் கூரை வேய எண்ணுகிறாய். திருடர் புகாவண்ணம் கதவிட்டுக் காப்புச் செய்கிறாய். இஃது அயல் வீட்டுக்காரர் மீது கொண்ட வெறுப்புணர்வா? இது திருடன் மீது கொண்ட வெறுப்பா? உன்னைப் பெற்றாளைப் பேணிக்காக்க முயல்கின்றாய் என்றால் மற்ற தாய்மாரை வெறுக்கின்றாய் என்றா பொருள்?