58 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
நீ தேர்வில் முதல்வனாக வர விரும்புவது, உன் வீட்டைக் கதவிட்டுக் காப்பது, உன் அன்னையைப் பேணுவது எப்படி வெறுப்புணர்வு ஆகாவோ அப்படியேதான் உன் தாய்மொழி மீது பற்றுக் கொண்டு, அதனைப் பேணுவதும் தீங்கு நேரா வண்ணம் காப்பதும் வெறுப்புணர்வன்று. மேலும் இஃது இயல்பும் கடமையும் அறிவுடைமையும் ஆகும். வஞ்ச மனத்தர் இவ்வாறுதான் அந்த மனப்பான்மை, இந்த மனப்பான்மை, வெறுப்புணர்ச்சி என்றெல்லாம் கதை கட்டுவர், திசை திருப்புவர். அதனைக் கேட்டு அஞ்சிவிடாதே! நம்பியும் விடாதே! எண்ணியெண்ணிப் பார்! மற்றவரிடம் உசாவி உண்மை யைத் தெரிந்து கொள். பின்னர் ஒரு முடிவுக்கு வா. 'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என வள்ளுவர் பெருந்தகை உலகுக்குக் கூறிய அறிவுரையை மறந்துவிடாதே. நான் பயிலுங்காலத்தே, 'துவேச மனப்பான்மை' நிகழ்ச்சி யொன்று நடந்தது. அதனை இங்கே எழுதுகிறேன். கூத்தப்பன், சிகாகிரீசுவரன் என்னும் பெயர்களுடைய நண்பர் இருவர் அக்கல்லூரியிலே பயின்று வந்தனர். ஒரு நாள் சிகாகிரீசுவரன் கூத்தப்பனை நோக்கி, ஏங்காணும் உமக்கு இந்த பாஷைத் துவேஷம்?' என்றார். 'எனக்கொன்றும் 'துவேஷம்' இல்லையே! ஏன் அப்படிச் சொல்கிறீர்?' என்று கேட்டார் கூத்தப்பன். "நடன சபாபதி" என்ற நல்ல பெயரை மாற்றிக் கூத்தப்பன் என்று பெயர் வைத்துக் கொண்டது துவேஷமில்லையோ?" என்று மேலும் ஒரு வினாத் தொடுத்தார் சிகாகிரீசுவரன். "என்ன ஐயா இதுவா துவேஷம்? என் மொழியில் என் பெயரை வைத்துக் கொண்டது 'துவேஷம்' என்றால் இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? அவனவன் அவனுடைய தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தானே விரும்புவான்? இதுவரை நாம் எப்படியோ வாழ்ந்து விட்டோம். இனியாவது நாம் தமிழராக வாழ விரும்புதல் குற்றமா?" மனம் வருந்தி மறுமொழி தந்தார் கூத்தப்பன். அப்பொழுதும் சிகாகிரீசுவரன் விடுவதாக இல்லை. மேலும் மேலும் எள்ளலாகவும் உரத்தும் பேசிக் கொண்டிருந் தார். |