அதற்குமேல் என்னால் உணர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. கிளர்ந்து எழுந்தேன். சிகாகிரீசுவரனை நோக்கி, 'அய்யா! எது பாஷைத் துவேஷம் என அறியாமல் பேசுகிறீரே! குடுமியான் மலையப்பன் என்ற தமிழ்ப்பெயரை, நீர் சிகாகிரீசுவரன் என வடமொழியில் மாற்றிப் பெயர் வைத்துக் கொண்டு அவரைப் போய்த் துவேஷி என்கிறீரே! (குடுமி - சிகா; மலை-கிரி; அப்பன்-ஈசுவரன்) யார் துவேஷி? இந்த நாட்டிலே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இந்த மண்ணிலேயே மடியப் போகும் நீர், தமிழ்ப் பெயரை மாற்றி வடமொழிப் பெயராக வைத்துக் கொண்டது துவேஷமா? தமிழ்மகன் தன் தாய் மொழியில் பெயர் வைத்துக் கொண்டது துவேஷமா? எது துவேஷம்? இத்தகைய துவேஷிகளை, தமிழ் மொழியின் பகைவர்களை இந்த நாட்டைவிட்டே விரட்ட வேண்டும், விரட்டாமல் விட்டால் இப்படித்தான் குறும்புத்தனம் செய்வீர் என்று சற்றுக் கடுமையாகவே பேசி விட்டேன். அதன் பின்னரே அவர் வாயடைத்துப் பேசாதிருந்தார். இதை ஏன் இங்கே கூறினேன் என்றால், நம் நாட்டில் நம் மொழிக்கு உரிமை வேண்டுமென்றால் இப்படித்தான் துவேசம் என்று கூறித் திசை திருப்பிவிடுவார்கள். அதை நீ நம்பி விடாதே! என்னைப் பிறவியால் தாழ்ந்தவன் என்று சொல்லாதே. நீயும் நானும் சமம் என்று சொன்னால் உடனே சாதித் துவேசம் செய்கிறான் என்று கிளப்பி விடுவர். ஏமாற்று வித்தையில் கை தேர்ந்தவர்கள் அவர்கள். நீ ஏமாளியாகி விடாதே! அண்மையிற் சிலர் மாநாடொன்று கூட்டினர். சில முடிவு களும் செய்தனர். "ஊர்தோறும் வடமொழிப் பள்ளிக் கூடம் வேண்டும். ஓவ்வொரு வீட்டிலும் திருமணம் நிகழும் பொழுது, வடமொழி வளர்ச்சிக்கென நன்கொடை நல்கல் வேண்டும்" என்ற கருத்தமையப் பேசினர். இம்மாநாடும் பேச்சும் எங்கே நிகழ்ந்தன? வடநாட்டில் நிகழ்ந்தன என்று கருதுகிறாயா? அவ்வாறாயின் நாம் கவலைப்படுதற்கில்லை. நமது தமிழ்நாட்டிலே - நூற்றுக்கு எண்பத் தேழு பேர் படிக்க எழுதத் தெரியாத நாட்டிலே தமிழ்மொழி சிதைந்து உருக்குலைந்து வருகிற நாட்டிலே அம்மாநாடு கூடுகிறது, அவ்வாறு பேசுகிறது. இதனைக் காணுங்கால் வியப்புத் தோன்று கிறதா? வெகுளி தோன்றுகிறதா? இப்பொழுது எண்ணிப்பார் எது துவேசம் என்று. தமிழ் வளர்ந்தால் தம் வாழ்வு பாதிக்கப்படுமோ |