பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

என்று அஞ்சும் நெஞ்சினர்தாம் துவேசம் என்று வஞ்சனையாகச் சொல்வர். அக்கூற்றுக்குச் செவி சாய்க்காதே!

இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம். நம் மொழிப் பற்றைக் குறுகிய நோக்கமென்றும் குறைகூறுவர். அஃது உண்மையா என்று பார்ப்போம். குறுகிய நோக்கம் விரிந்த நோக்கம் என்பதெல்லாம் தனிமனிதனுடைய வாழ்வைப் பொறுத்தது. ஒரு சமுதாயத்துக்கோ சமுதாயத்தைச் சார்ந்த மொழிக்கோ நாட்டுக்கோ அவை பொருந்தா. தனி மனிதன் வேண்டுமானால் தான் மட்டும் வாழக் கருதாது பிறரும் வாழ விரும்பித் தன்னலந் துறந்து விரிந்த நோக்குடன் இருக்கலாம். நாடு, மொழி, சமுதாயம் என்பவற்றில் அவ்வாறு இருத்தல் கூடாது; இருக்கவும் முடியாது. வெள்ளையனே வெளியேறு என்று கூறினோமே ஏன்? குறுகிய நோக்கத்தாலா? துவேசமனத் தாலா? தன்னை மற்றவன் தாழ்த்தவோ அழிக்கவோ கருதினால், தனிமனிதன் கூட விரிந்த மனப் பான்மையை விடுத்துப் பிரிந்த மனப் பான்மையுடையவனாகி விடுகிறானே!

தனி மனித வாழ்க்கையே இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு சமுதாயம்தான் கெட்டழிந்து மற்ற சமுதாயம் வாழ வேண்டு மென்ற விரிந்த மனப்பான்மையுடனா இயங்க முடியும்? தாய்மொழி கெட்டழியினும் பிறமொழி வாழட்டும் என்று எவரேனும் எண்ணு வாரா? இத்தகைய விரிந்த மனப்பான்மையை எந்த நாட்டு வரலாறும் எடுத்துக் கூறவில்லையே. அறநூல்களும் அவ்வாறு மொழிய வில்லையே. அப்படியே இது குறுகிய மனப்பான்மையாகத்தான் இருக்கட்டுமே இருந்தால் குடியா முழுகிப் போகும்?

தம் தாய்மொழி எவ்வாறாயினும் ஆகுக; நாம் பரந்த மனம் படைத்தவராக இருந்து தேசியம் பேசுவோம் எனத் திரியும் விரிந்த மனப்பான்மையினருக்குப் 'பிரசன்ட விகடன்' என்னும் தேசிய இதழ் கூறும் அறிவுரையைக் கூறுகிறேன் கேள். 15.12.53 ஆம் நாள் வெளிவந்த இதழ் நடுவுநிலைமையுடன் எழுதியுள்ளது. அதனை அப்படியே தருகிறேன்.

"தேசிய வெறி சில சமயங்களில், பகுத்தறிவை இழக்கும் படி செய்து விடுகிறது. பல சமயங்களில் சுய சிந்தனையை மழுங்கடித்தும் விடுகிறது. இதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாய் விளங்குபவர்கள் இந்திமொழி ஏகாதிபத்தியவாதி களாவர். ஒரேமொழி, ஒரே