பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

உண்மையானால், நேர்மை, உண்மை, நடுவுநிலைமை என்பன வற்றை ஓரளவேனும் உணரும் நிலைமையைப் பெற்றிருப்பார் களானால் நம் உரிமை யுணர்வைக் குறுகிய மனப்பான்மையெனக் கூறார்.

அந்தோ! நம் தாய்மொழிக்கு இப்படி ஓர் இடையூறா வரவேண்டும்? ஆட்சியில், நம் இல்லத்துச் சடங்குகளில், வழிபாடு களில், கல்வியில் இப்படி எல்லாத் துறைகளிலுமா பிறமொழியாட்சி செலுத்த வேண்டும்? அத்துறை களிலெல்லாம் அயன்மொழியாட்சி களையப்பட்டுத் தமிழ் ஆளவேண்டும் என்றால் இத்தகைய எதிர்ப்பா? துறைதோறும் துறைதோறும் தமிழ் படும் பாட்டை நினைத்தால் நெஞ்சங் குமுறுகிறதே! பொறுமையை மீறத் தோன்று கிறதே! தமிழன் என்ற பெயரளவிற்றானே திரிகிறோம் நாம்! உணர்ச்சியற்ற, நடைப் பிணங்களாகி விட்டோமே!

தாய்மொழி வாழவேண்டுமென்று சொல்வதைக் குறுகிய நோக்கமென்று சொன்னால் காந்தியடிகளும் அத்தகைய நோக்க முடையவர்தாம். அடிகளுக்கு ஆங்கிலம் தெரியும். இந்தியாவின் பொதுமொழி இந்தியென்று கூறுபவருங் கூட. ஆனால் அவர் தமது வரலாற்றை ஆங்கிலத்திலோ இந்தியிலோ எழுதினாரல்லர். தம் தாய்மொழியாகிய கூர்ச்சர மொழியிற்றான் எழுதினார். இது குறுகிய நோக்கமா? அன்றிப்பிற மொழியின் பாற் கொண்ட வெறுப்பா? அன்று. தாய்மொழிப்பற்று.

மயிலாடுதுறைக்கு நம் காந்தியடிகள் ஒருமுறை வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் அப்பெருந்தகைக்கு வரவேற்பிதழ் ஒன்று நல்கினர். அதற்குக் காந்தியடிகள் மறுமொழி பகரும்பொழுது, "வரவேற்பு ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருத்தல் காண்கிறேன்... நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று, அவற்றின் சமாதியின் மீது ஆங்கிலத்தை நிலவச் செய்வீர் களாயின், நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பவர் களாக மாட்டீர்கள் என்று சொல்லுவேன். எனக்குத் தமிழ்மொழி தெரியாதென்று நீங்கள் உணர்ந்தால் அம் மொழியை எனக்குக் கற்பிக்கவும், அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கை அளித்து, அதை மொழி பெயர்த்து உணர்த்தி யிருப்பீர்களாயின் உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவர்களாவீர்கள்" என்று கூறியிருக்கிறார்.