மற்றோரிடத்தில் "தாய்மொழியின் வழிப் பிள்ளைகட்குக் கல்வி பயிற்றல் மிக முக்கியமானது. தாய்மொழியை அவமதிப்பது தேசியத் தற்கொலையாகும்" என்று கூறியருளி யிருக்கிறார். தாகூர், பிரமசமாசத்திற் சேர்ந்து மத வேற்றுமைகளினால் ஏற்படும் தீங்குகளை ஒழிக்கத் தாய்மொழியில் கணக்கில்லாச் சொற்பொழிவுகள் செய்துள்ளார். மாநிலக் கூட்டங் களிலெல்லாம் தாய்மொழியிலேயே எல்லாச் சொற்பொழிவு களும் செயல் நிருவாக முறைகளும் நடைபெற வேண்டும் என்று வற்புறுத்தினார். இது குறுகிய நோக்கமா? மேலும், தாகூர், உலகப் புகழ் பெற்ற 'கீதாஞ்சலி' என்ற நூலைத் தம் தாய்மொழியாகிய வங்க மொழி யிற்றான் முதன் முதலில் எழுதினார். திலகர் 'கீதா ரகசியம்' என்ற நூலைத் தம் தாய்மொழியாகிய மராட்டிய மொழியிலேயே ஆக்கினார். இவர்களையெல்லாம் குறுகிய நோக்கமுடையவரெ என்று கூறிவிடமுடியுமா? பாரதி, 'சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்றானே அவனுமா குறுகிய நோக்கமுடையவன்? நாம் பிறமொழிகளைப் பயில வேண்டா என்றா கூறுகிறோம்? எந்த மொழி கற்றாலும் எத்தனை மொழி பயின்றாலும் தாய் மொழியை, தமிழ்மொழியை மறந்து விடாதீர்கள் என்று தானே எடுத்துச் சொல்கிறோம். 'தமிழ்மொழி வரலாறு' என்ற நூலைப் படித்துப்பார். எழுதியவர் சூரியநாராயண சாத்திரியார். நடுவுநிலை பிறழாமல் எழுதுகிறார். மேலும் தம் பெயரைப் 'பரிதிமாற் கலைஞன்' என மாற்றி வைத்துக் கொண்டார். அவர் எழுதுவதையும் பெயர் மாற்றத்தையும் கண்டு அவரைக் குறுகிய மனப்பான்மையினர் என்று கூறுவதா? கூறுவார். மதி பழுதுபட்டுவிட்டது என்றுதான் கருதவேண்டுமே தவிரப் பிறிதொன்றும் எண்ணுதற்கில்லை. இந்த நாட்டிலே வேறுமொழி ஆதிக்கம் செலுத்த வேண்டு மென்பது தான் குறுகிய நோக்கமும் கெட்ட நோக்கமும் ஆகும். நாம் வேறொரு நாட்டிலே சென்று தமிழ்மொழிதான் ஆட்சி செலுத்த வேண்டுமென்று கூறினால் அது தவறு; குறுகிய நோக்கமும் ஆகும். நாம் நம்முடைய நாட்டிலே நம் மொழி வாழ, வளர, வளம்பெற, ஆள விரும்புகிறோம். இது தவறென்றோ குறுகிய நோக்கமென்றோ அறிவுடைய எவருமே சொல்லார். |