பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்65

13
பிறமொழிப் பயிற்சி எப்பொழுது?

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். சென்ற மடலில் நாகர் தம் மொழிப் பற்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந்நாகரின் மொழிப் பற்றைப் பற்றி விளக்கமாக எழுதும் படி வினவியிருந்தனை, எழுதுகிறேன். முழுவிளக்கம் தருகிறேன். கேள்; தமிழைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுவேன். உன் போன்ற இளைஞரிடம் உண்மையான தமிழார்வம் தோன்றிவிடின் எதிர்காலத்திலாவது தமிழ் உயர்நிலையடையும், தமிழகம் தமிழகமாக விளங்கும் என்ற எண்ணமுடையவன் யான். "இருந்தமிழே உன்னால் இருந்தேன்" என்ற உணர்வுடையவன் யான். தமிழுக்காக என்னைப் பயன் படுத்தும் இயல்புடையவன் யான். ஆதலின் தமிழைப் பற்றி மகிழ்வுடன் எழுதுவேன்.

அய்ம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை, நாகர்கள் பற்றிய குறிப்புகளை, செய்திகளை நமக்குக் கூறுகிறது. அதனையே உனக்கு எழுதுகிறேன். சாதுவன் என்பான் ஒரு வணிகன். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று பொருள் தேடக் கடல் கடந்து செல்லும் இயல்பு உடையவன். வழக்கப்படி ஒருநாள் கடல் கடந்து சென்றான். சென்று நிறைந்த பொருள் ஈட்டி மீண்டான். மீளுங்கால் பெரும்புயலால் அவன் வந்த மரக்கலம் சிதறுண்டு கடலுள் மூழ்கியது. அவன் மூழ்கித் தவிக்கையில் உடைந்த மரத்துண்டொன்று அவன் கைக்குக் கிட்டியது. அதனைப் பற்றிக் கொண்டே மிதந்து சென்று, அலை ஒதுக்கிய பக்கம் ஒரு கரையை அடைந்தான். கரையேறியதும் களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் படுத்து விட்டான்.

சாதுவன் கரையேறிய பகுதி நாகர்கள் வாழும் மலைப்பகுதி, அவர்கள் ஆடையின்றி வாழ்பவர்கள், கல்வியறிவற்றவர்கள்; நாகரிகம் அற்றவர்கள்; முரடர்கள்; தன்மனை, பிறர்மனை என்று