பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வேறுபாடறியாதவர்கள்; மனிதனைக் கொன்று தின்னும் மாண் புடையவர்கள்; தமிழல்லாத பிறமொழி பேசுபவர்கள். சாதுவன் கிடந்த மரத்தருகே நாகர் சிலர் வந்தனர். படுத்திருக்கும் சாதுவனைக் கண்டதும் நாகர்கள், தமக்குப் பேருணவு கிடைத்ததென்று பெரு மகிழ்வு கொண்டனர். அவனை எழுப்பினர். எழுந்ததும், அவர்கள் குறிப்பை அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்துகொண்ட சாதுவன், தனக்கேற்பட்ட இன்னல்களையெல்லாம் அவர்கள் பேசும் மொழியி லேயே எடுத்துச் சொன்னான். தங்கள் மொழியில் பேசிய சாதுவனிடம் நாகர்கள் இரக்கங் கொண்டு சாதுவனைக் கொல்லாது தம் தலை வனிடம் அழைத்துச் சென்றனர்.

செய்தி முழுதும் அறிந்த நாகர் தலைவன், மகிழ்ந்து, சிலநாள் தங்குமாறு சாதுவனை வேண்ட, அவனும் தங்கினான். அப்பொழுது சாதுவன் நாகர் தலைவனுக்குச் சில அறிவுரைகளை எடுத்தோ தினான். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அத்தலைவன், முன்னர்க் கொள்ளையடித்து வைத்திருந்த செல்வங்களில் மிகுதியும் தந்து, அவனைக் காவிரிப்பூம் பட்டினத்திற்குச் செலவிடுத்தனன். இதுதான் மணிமேகலை தருஞ் செய்தியாகும்.

இதிலிருந்து நீ என்ன தெரிந்து கொள்கிறாய்? நாகரிகமற்ற நாகர்கள் சாதுவனைக் கொல்லாது விடுத்ததும், இரக்கம் காட்டியதும் அத்தலைவன் சாதுவனுக்கு வேண்டிய பொருள் கொடுத்துப் பாராட்டியதும் ஏன்? நாகர்கள் பேசும் மொழியில், சாதுவன் பேசினான் என்ற ஒரே காரணத்தினாலேதான். இம் மொழிப் பற்று அவர்களுக்கு இயல்பாக வாய்த்த ஒன்று. காட்டு மிராண்டிகளாக வாழ்ந்த அவர்களுக்கிருந்த மொழிப்பற்று நமக்கில்லையே! நாமென்ன அவரினும் இழிந்தவர்களா? இத்தகைய காட்டு மிராண்டித்தனம் நம்மிடம் இருந்தால் எவ்வளவோ மேல். ஆனால் நாம் காட்டு மிராண்டிகள் அல்லோம். காட்டுமிராண்டிகளுக்கு நாகரிகம் இதுவென்று கற்றுக் கொடுத்த பேரினத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பேரினத்தின் வழித் தோன்றல்கள் நாம் என்று வாயாரப் பேசுவோம். ஆனால் அப்பேரினத்தின் பெயருக்கு மாசு உண்டாகும் வகையில் நடந்து கொள்கிறோமே! தாய்மொழியை மறந்து, தமிழ்நாட்டிற் கண்டகண்ட மொழிகளுக்குக் கதவு திறந்து விடுகிறோம்; வரவேற்பும் கூறுகிறோம். இவ்வழக்கம் தகாதது என்போரை வசைமாரி பொழிகின்றோம். இத்தகைய அறியாமையை என்னென்பது?