தம்பி, நீ இதைப் படித்தவுடன், 'சாதுவன்' தமிழன் தானே அவன் நாகர் மொழியைத் தெரிந்திருக்கிறானே! அதுபோல நாமும் பிறமொழிகளைப் பயின்று கொள்வது நன்மைதானே? பிறமொழி களைப் பயிலக் கூடாது என்று ஏன் மறுக்க வேண்டும்? என்றெல்லாம் ஐயுறலாம். அதுவும் சரியான ஐயமே. அவன் தமிழன்தான். ஆனால் அவன்தன் தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டுப் பிறமொழியைப் பயின்றான் என்று சொல்லப் படவில்லையே! மேலும் காவிரிப் பூம்பட்டினத்தி லிருந்த அத்தனைப் பேரும் நாகர் மொழியைப் பயின்றார் என்றும் கூறப்படவில்லையே! சாதுவனைப் போல வெளிநாடு செல்லும் நிலையில் இருந்தவர்கள், வாணிகத்தின் பொருட்டும் பிறபொருட்டும் ஏனைய மொழிகளைத் தாமே விரும்பிக் கற்றுக் கொண்டனரேயன்றி வேறொன்றில்லை. நாகர்கள் சாதுவன் மீதோ சாதுவன் வாழ்ந்த நாட்டின் மீதோ கட்டாயமாகத் திணிக்கவில்லையே அம்மொழியை. தனி மனிதன் தன் தேவைக்கு எத்தனை மொழி வேண்டு மானாலும் பயிலலாம். எனினும் தன் தாய்மொழியை மறந்துவிடுதல் கூடாது. "ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயன்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராக் கொள்வீர்" என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடலால் தமிழகத்தின் மொழிக் கொள்கையைத் தெளிவுபடத் தெரிந்து கொள் கிறோம். தாய்மொழியைப் புறக்கணித்து விட்டுப் பிறவற்றிற்கு ஆக்கந் தேடுதல் தகாது என்றுதான் சொல்கிறேன். தமிழ் ஆட்சிமொழியாதல் வேண்டும்; தமிழர் நூற்றுக்கு எண்பது பேராவது தமிழ் கற்றவராதல் வேண்டும். அதன் பின்னர் அவரவர் தகுதிக்கேற்ப, தேவைக்கேற்ப, விருப்பிற் கேற்ப எத்தனை அயன் மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய சூழ்நிலையை அரசியலார் ஆக்கித் தருதல் வேண்டும். அதை விடுத்து நூற்றுக்கு எண்பத்தேழு பேர் கல்வியறி வில்லாத நாட்டில், இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று ஒரு சமுதாயத்தின் தலையில் சுமத்துவதை எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்? நீயே சொல்! இந்த நிலைதான் கூடாதென்று சொல்கிறேன். பிறமொழிகளே கூடாதென்று கூறவில்லை, தமிழறி |