14 மனம் வைத்தால் வழியா இல்லை? அன்புள்ள அரசு, தமிழ் வளர நாம் என்னென்ன செய்ய வேண்டும்? என வேண்டி எழுதிய மடல் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு வரும் உன்னைப் போல் ஆர்வங்காட்ட வேண்டும். ஆர்வம் காட்டினாற் போதாது, முயற்சியும் வேண்டும். அவ்வாறு முயன்றாற் றான் நாம் உருப்பட முடியும். ஒவ்வொரு துறையிலும் தமிழ் மணங்கமழச் செய்ய வேண்டும். அரசியலார் தமிழை ஆட்சி மொழியாக்கு முன், நாம் நம்மை அதற்குத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டாவா? ஒவ்வொரு துறையிலும் தமிழ் படும் பாட்டை உன்னிப்பாகப் பார்த்துத் தடைகளையகற்றித் தூய்மை பெறச் செய்ய வேண்டும். முதலில் நாம் எழுதும்பொழுதும் பேசும்பொழுதும் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தப் பழகுதல் வேண்டும். அழகான, இனிமையான தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற சொற்களை ஏன் பயன்படுத்துதல் வேண்டும்? மகிழ்ச்சி இருக்கும் போது, 'சந்தோஷம்' ஏன்? 'ஜாக்கிரதை' என்று சொல்லாது விழிப்புணர்வோடு இரு. 'சாதம்' என்று சொன்னாற் றான் சோறு கிடைக்குமா? 'ஜலம்' என்று சொல்லாவிடின் தண்ணீர் உள்ளிறங்காதா? தண்ணீர் ஊற்று நம்மிடம் இருக்கும்போது, 'வாட்டர்'க்கும் 'பானி'க்கும் மாற்றானிடம் சென்று ஏன் மண்டியிட வேண்டும்? தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமே தவிரப் பிறசொற்களை ஏன் கலக்கவேண்டும்? கலந்தால் எப்படித் தமிழ் வளரும்? இன்னுஞ் சிலர், தமிழ்ச் சொற்களையே பிறமொழிச் சொற்கள் போல வழங்கலும் உண்டு. அக்கொடுமையும் ஒழிய வேண்டும். |