பக்கம் எண் :

70கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

வேஷ்டி, பதஷ்டம் என்ற சொற்கள் வடமொழியில் இல்லா திருந்தும் வேட்டி, பதட்டம் என்ற நல்ல சொற்களைத் திரித்து வடமொழிபோல ஒலித்து மகிழ்கின்றோம். சூடு என்ற தமிழ்ச் சொல்லை 'ஜுடு' என்று பலர் பேசுவதைக் கேட்டிருப் பாய். காட்சி (காண்+சி) என்ற சொல்லைக் 'காக்ஷி' யாக்கிக் கண்டுகளிப்போரும் உளர். இதனை அறியாமையென்று சொல்வதா? அடிமை மனப் பான்மையென்று சொல்வதா? இத்தகைய குறைபாடுகளையெல்லாம் அகற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.

நீர் என்ற தமிழ்ச் சொல்லைக் கன்னடியர் 'நீரு' எனச் சொல் கின்றனர். தெலுங்கர் 'நீளு' எனச் சிறிது திரித்து வழங்குகின்றனர். மலையாளிகள் 'வெள்ளம்' என்ற தமிழ்ச் சொல்லால் நீரைக் குறிப்பிடுகின்றனர். விரிந்த மனப்பான்மை படைத்த நாமோ 'ஜலம், வாட்டர், பானி' என்று கூறி வேட்கை மீதுர அலைகிறோம். இவ்வாறு அலைவது கிடக்கட்டும். மொழி என்று கூடச் சொல்லக் கூசுகிறோமே, 'பாஷை' என்று பகர்ந்து பாழாகிறோம். பின்னர்ப் 'பாஷை' யைத் தமிழாக்கிப் 'பாடை' சுமக்கிறோம். இந்தச் சுமை ஏன்? இப்படியெல்லாம் எழுதினால், பேசினாற்றான் விரிந்த மனப் பான்மையராக முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் செயலன்றோ இது?

பிறமொழிச் சொற்களைக் கையாள்வது அறவே கூடாது என்று நான் கூறுவதாகக் கருதிவிடாதே. அப்படி அடியோடு வேண்டாமென்று சொல்லவில்லை. இன்றியமையாத இடங் களிலே எந்த அளவு கையாளலாமோ அந்த அளவு கையாள வேண்டும். எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாள வேண்டும். அளவும் முறையும் மீறுதல் கூடாது. பாலில் நீரையோ மோரையோ எதற்காகக் கலக்கிறோம். ஏதோ ஒரு தேவையை முன்னிட்டுத்தானே? அது போலத் தேவையை முன்னிட்டுப் பிற சொற்களைக் கையாள்வது வரவேற்கத் தக்கதே. நீரோ, மோரோ அளவுக்கு மீறினால் பாலின் தன்மை கெட்டுவிடுமன்றோ?

அதுபோலப் பிற மொழிக் கலப்பால் தமிழின் தன்மை கெட்டுவிடாமற் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

இருக்கும் சொற்களை விடுத்து வேறு மொழிகளைக் கடன் வாங்குதல் கூடாது என்று தான் சொல்கிறேன். நம் முன்னோர் பிற