மொழிகளைக் கையாளலாம் என இடந்தந்துள்ளனர். தமிழ் மொழியிற் சொற்களை நான்கு வகையாக வகுத்துள்ளனர். இயற் சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன அவை. எளிதில் எல்லாராலும் பொருளறியக் கூடிய சொல் இயற்சொல் எனப்படும். கற்றவரால் மட்டும் பொருளறியக் கூடிய சொல் திரிசொல்லாகும். தமிழகத்தின் பிற திசைகளிலிருந்து வந்து இங்கே வழங்குஞ்சொல் திசைச்சொல் எனப்படும். வடசொல் எனப்படுவது வடமொழியில் உள்ள சொல் தமிழில் தமிழ் ஒலிமரபிற்கேற்ப வந்து வழங்குஞ் சொல். இவ்வாறு வகுத்துக் கொண்டமையால் வடசொல்லும் அஃதொழிந்த பிற திசைச் சொல்லும் தமிழில் வந்து வழங்கலாம் என்பது நன்கு புலனாகிறது. இவ்வாறு இடந்தந்து விட்டமையால் வடசொற்களையும் திசைச் சொற்களையுமே முழுதுங் கலந்து பேசவோ எழுதவோ செய்தல் கூடாது. அளவு வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சன்றோ? இவ்வாறு பிற சொற்களைக் கையாளும் பொழுதும் தமிழ் ஒலி மரபிற்கேற்பவே கையாளுதல் வேண்டும். பிற ஒலிகளை அப்படியே கையாள்வது தவறு. இத்துறையில் கம்பர் நமக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளார். 'லஷ்மணன்' என்ற சொல்லை இலக்குவன் என்றும், ராமன் என்பதை இராமன் என்றும், விபீஷனன் என்பதை வீடணன் என்றும் தமிழ் மரபிற்கேற்பக் கையாண்டுள்ளார். அது பாராட்டுதற்குரியது. அது மட்டுமன்று 'யக்ஞசத்ரு' என்னும் வடமொழிச் சொல்லை அப்படியே மொழிபெயர்த்து வேள்விப் பகைஞன் (யக்ஞம் - வேள்வி; சத்ரு - பகைவன்) என அழகான தமிழ்ப் பெயராக்கி விட்டார். நாமும் அவ்வாறே தமிழ் மரபு கெடாமற் பிற சொற்களைக் கையாள வேண்டும். இங்கிலீஷ் என்ற சொல்லை எப்படி வழங்குகிறோம்? அப்படியே வழங்குவதில்லையே. ஆங்கிலம் என அழகியதோர் சொல்லாக்கினர் நம் முன்னோர். அவர் வழி வந்த நாமும் தமிழ்மரபு கெடாமல் நடந்து கொள்ள வேண்டாவா? ஆங்கிலேயர், நம் ஊர்ப்பெயர்களை அவர்தம் ஒலிமரபிற்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லையா? திருநெல் வேலியை 'டின்னவேலி' எனச் சொல்லினர். தரங்கம்பாடி 'ட்ராங்யூ பார்' ஆகவில்லையா? மதுரையை 'மெஜீரா' என்றனர். அவர்களைப் பின்பற்றி நாமும் நம் மொழி மரபிற்கேற்பச் சொல்லவும் எழுதவும் செய்தோமா? ஆனால் நம்மொழிப் பண்பை மறந்துவிடுகிறோம். |