72 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
இஃது அடிமை மனப்பான்மையைக் காட்டுகிறதே ஒழிய வேறென்ன? விடுதலை பெற்றும் நமக்கு அடிமை மனப்பான்மை நீங்க வில்லையே! நீ எழுதும் பொழுது அயன் மொழிச் சொற்களைக் கையாள நேர்ந்தால் நம் ஒலி மரபு கெடாமல் எழுது. எடுத்துக்காட்டாகச் சில தருகிறேன். 'ஜனவரி' என்று எழுதாதே; சனவரி என்று எழுது. 'ஜூன்' என்று எழுதாதே. 'சூன்' என்று எழுது. 'ஆகஸ்ட்' என்பதை ஆகத்து என எழுது, 'செப்டம் பரையும், டிசம்பரை'யும் செப்தம்பர், திசம்பர் என எழுது. மேலும் அயன் மொழிச் சொற்களைக் கையாளும் பொழுது அவற்றிற்கேற்ப ஆக்கச் சொற்களைக் கண்டுபிடித்தெழுது. 'சைக்கிள்' என்பதை ஈருருளி அல்லது மிதிவண்டி எனும் சொற்களாற் குறிப்பிடு. இவ்வாறு புதுப்புது ஆக்கச் சொற்களை ஆக்கிக்கொள்வதற்கேற்ற உயர் தனிச் செம்மொழி தான் நம்மொழி. இதனை மொழியறிஞர் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக்கச் சொல்லுக்கு அடங்கா தாயின் நம் ஒலிமரபிற் கேற்ப மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். தனித்தமிழில் எழுதினால் பேசினால் ஒன்றும் புரிய வில்லையே என்று சிலர் கருதுகின்றனர். பேரறிஞர் அண்ணா அவர்கள், மதுரை எழுத்தாளர் மன்றத்தில் பேசிய கருத்தினை ஈண்டுக் குறிப்பிடுவது நலம் பயக்கும் என்று கருதுகிறேன். "புரிந்த மொழி புரியாத மொழி என்றெல்லாம் கூறுவது தவறு. நேற்று புரியாதது இன்று புரியும்; இன்று புரியாதது நாளை புரியும்; எனக்குப் புரியாதது என் மகனுக்குப் புரிகிறது. எனக்கு 'லைட் ஹவுஸ்' புரியும்; என் மகனுக்குக் கலங்கரைவிளக்கம் புரிகிறது. ஆகவே புரிந்த மொழி புரியாத மொழி என்பது மொழியின் குற்றமன்று; அதைப் புரிந்து கொள்ள முயலாமைதான் நம் குற்றம்' என்று குறிப்பிட்டார். அதனால் நாம் முயன்று பல தடவை சொல்லியும் எழுதியும் வந்தால் எல்லாம் எளிதாகி விடும். தமிழில் எழுதுவது தமிழனுக்குப் புரிய வில்லையென்றால் கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்? தமிழ் இந்த நாட்டிலே இப்படியாயிற்றே என ஏங்கு கின்றேன். நான் சொல்வதெல்லாம் நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலானோர் கையாண்ட மொழி நடை யையா சொல்கிறேன்? அல்லது சங்கத்து வழங்கிய நடையிலா எழுதச் சொல்லுகிறேன். எல்லார்க்கும் விளங்கக் கூடிய எளிய தமிழ் நடையைத்தானே குறிப்பிடுகிறேன். |