74 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
மக்களுக்கு பிரேமலதா, லில்லி, சரோஜா, வைஜயந்தி என்றெல்லாம் பெயர் சூட்டுகின்றனர். செல்வி, குமுதம், அன்னம், அல்லி, பூங்கோதை, தேன்மொழி, பாவை, ஓவியம், யாழிசை, பொன்னி, பூங்கொடி, தென்றல், காவிரி யென்ற பெய்hகளைச் சூட்டினால் அவ்வொலி அழைப் போர் வாயில் நுழையாதா? அன்றி அழைக்கப் படுமாயின் செவியிற் புகாதா? ஆண் மக்களுக்குப் பிரவின், சுரேஷ், நரேஷ், ஜமால், உசேன், ஜார்ஜ், டேவிட் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கின்றோம். பழனி முருகன், ஆறுமுகம், தமிழண்ணல், கதிரவன், அருளாளன், பாரி, குமணன், செல்வம், அமுதன், கலைக்கோ, செழியன், முகிலன், இனியன் என்றெல்லாம் இனிக்குந் தமிழிற் பெயர்வைத்தால் அழிந்தா விடுவோம்? தமிழிற் பெயர்வைத்துக் கொள்வதால் நாம் தமிழர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதுடன் மற்றொரு நன்மையும் உண்டு. சாதிவேறுபாடுகள் அகற்றப்படவேண்டும் என்று நாட்டு நலங் கருதும் பெரியார் அறிஞர் அனைவரும் கூறுகின்றனர். அதற்குப் பல வழிகளும் கூறி வருகின்றனர். சாதி நீக்கத்திற்குத் தமிழ்ப் பெயர்கள் வைப்பதும் ஒரு வழியாகும். தமிழண்ணல், கதிரவன், அருளாளன், அன்பழகன், பாரி முதலிய பெயர்களுடன் சாதிப்பெயர்களை ஒட்டிப் பார். ஒட்டவே ஒட்டாது. இவ்வாறெல்லாம் தமிழை வளர்ப்பது நம் கடமை தம்பி. உன் தந்தை முடியரசன். |