பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்75

15
கவிஞனாக விரும்புகிறாயா?

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். நீ கவிதையொன்று எழுதி எனக்கு விடுத்திருந்தாய். அதைப் பற்றி என் கருத்தையும் எழுதுமாறு வேண்டியிருந்தாய். மிக்க மகிழ்ச்சி. நீ எழுதியிருந்த வரிகளில் நல்ல பொருட்சிறப்பு மிளிரக் கண்டேன். ஆனால் அது கவிதையாக எனக்குப் புலப்பட வில்லை. நீ மடலில் எழுதியிருந்த பிற பகுதி களுக்கும் கவிதையென்று நீ எழுதியுள்ள பகுதிக்கும் என்ன வேறுபாடு காண்கின்றாய்? பிற வரிகள் நீளமாக உள்ளன. கவிதையென்று நீ எழுதியுள்ள வரிகளோ இரண்டிரண்டு சொற்களாக மூன்று மூன்று சொற்களாகப் பிரித்துப் பிரித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வளவு தான். வேறு கவிதை வடிவமோ ஓசையோ எதுகை மோனைகளோ ஒன்றுமே காணவில்லையே. உன் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன். ஆனால் அதற்குரிய அடிப்படைப் பயிற்சிகள் இல்லாமல் கவிதை எழுதத் தொடங்கி விட்டாயே.

முதலில் உரைநடைக்கும் கவிதைக்கும் உள்ள வேறு பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் கருதி மயங்காதே. அழகான - பளபளப்பான தூண்களையும் உறுப்புகள் அமைந்த சிலைகளையும் பார்த்துவிட்டு இரண்டும் கற்களால் அமைந்தவைதாமே என்று கருதி அவற்றை ஒன்று என்று அஃதாவது சிலையென்று முடிவு கட்டிவிடாதே. சிலை வேறு; தூண் வேறு. உரைநடையும் கவிதையும் சொற்களால் அமைந்தவை தாமே என நினைத்து அவை இரண்டும் ஒன்று எனக் கருதிவிடாதே. இரண்டு வெவ்வேறு தன்மையன.

"கூட்டுக் களியினிலே - கவிதை
கொண்டு தரவேண்டும் - அந்தப்