76 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
பாட்டுத் திறத்தாலே - வையத்தைப் பாலித்திட வேண்டும். என்று பராசக்தியிடம் பாரதியார் வேண்டுவதாக ஒரு பாடல் உண்டு. அப்பாடலில் "கவிதை கொண்டு தர வேண்டும்" என்று வேண்டுகிறார். அஃதாவது கவிதை தானாக உள்ளுணர்ச்சியி லிருந்து புறப்பட்டு வெளிவர வேண்டும் என்பது கருத்து. ஆனால் உன்னிடமிருந்து கவிதை தானாக வெளிவரவில்லையே. வலிந்து இழுத்து வந்தது போலக் காணப்படுகிறது. அவ்வாறி ழுப்பது கவிதை யாகாது. உணர்ச்சி உள்ளிருந்து உந்தத் தானே பொங்கி வெளிவர வேண்டும் கவிதை. அதுதான் உயிர்க்கவிதை யாக இருக்க முடியும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் கவிதை எப்படி யிருக்க வேண்டும் என விளக்கம் தருகின்றார். அவர்க்கே அமைந்த இயல்பான முறையில் எளிமையாகத் தந்துள்ளார். "உள்ளத் துள்ளது கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை தெரிந்துரைப்பது கவிதை" இது தான் கவிமணி தரும் விளக்கம். உள்ளத்திலிருந்து கவிதை வரவேண்டும். அஃதும் இன்ப உருவாக வர வேண்டும். அது தெள்ளத் தெளிந்த தமிழில் அமைந்திருக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார். ஆனால் இன்று கவிதை உள்ளத்திலிருந்தா வருகிறது. இன்ப வுருவெடுத்தா வருகிறது. தெள்ளத் தெளிந்த தமிழிலா வருகிறது. அனைத்துமே தடுமாறிப் போயல்லவா கிடக்கிறது! சிலர் எழுதுவதிலே நல்ல கருத்துகள் நிறைந்து காணப்படும். ஆனால் இலக்கண அமைப்பே புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும். கருத்து மட்டும் கவிதையாகி விடாது. சிலர் புனைவதிலே இலக்கண முறை போற்றப்பட்டிருக்கும். ஆனால் கருத்துகள் காணாமற் போய்விடும். இலக்கண அமைப்பு மட்டும் கவிதையாகி விடாது. கருத்தும் இலக்கண அமைப்பும் இணைவதே கவிதை. |