உயிரும், வளர்ச்சியும், பொருளும், இலக்கண அமைப்பும் கலந்தது தான் கவிதை. வீடு என்றால் அடிப்படை நாற்புறமும் சுவர்கள், மேற்கூரை, வாயில், சாளரம் முதலியன வேண்டும். இவற்றுள் எது குறையினும் வீடென்று பெயர் பெறாது. அது போலக் கவிதைக்கு வேண்டிய கூறுகளில் எது குறையினும் கவிதையாகாது. வீடு அல்லது இல் என்ற பொதுப்பெயர் அமைப்பு முறைகளால் குடில், வளமனை, அரண்மனை, கோவில் என்றெல்லாம் சிறப்புப்பெயர்கள் பெறுகின்றன. அதுபோலவே கவிதை அல்லது பாட்டு என்ற பொதுப்பெயர் அமைப்பு முறைகளால் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய சிறப்புப் பெயர்கள் பெறுகின்றன. இலக்கணத்திற்குக் கட்டுப்பட்டு, அதற்கு அடிமையாகி எழுதப்படுவது உயிர்க்கவிதையாகி விடாது; இலக்கணத்தைத் தனக்குக் கட்டுப்படுத்தி, அதனை அடிமையாக்கி எழுதப் படுவது தான் உயிர்க்கவிதையென்றும் உணர்ச்சிக் கவிதையென் றும் சொல்லப்படும். அஃதாவது கவிஞன் இலக்கணத்திற்குப் பின்னே செல்லுதல் கூடாது. இலக்கணம் கவிஞனுக்குப் பின்னே வருதல் வேண்டும். இலக்கணம் அவன் புலமையொடு இரண்டறக் கலந்து விடின் உணர்ச்சி உந்த அவனிடமிருந்து வெளிப்படும் பாடல் களிலே இலக்கணம் தானாக அமைந்து கிடக்கும். இவ்வாறு வெளிவரும் உயிர்க்கவிதைகள் இன்று சிலநேரங் களில் மட்டும் தென்படுகின்றன. ஏனைய நேரங்களில் உயிரற்ற - உணர்ச்சியற்ற - பொருளற்ற வரிகள் தாம் முடிசூடி வெளிவருகின்றன. இவ்வாறு சீர் கெட்டுப் போய்க் கிடக்கும் கவிதையுலகில் நீ கவிஞனாக உலாவர எண்ணுகிறாய். தமிழ் மொழிக்குத் தீங்கு செய்துவிடாதே. விழிப்பாக இரு. அடிப்படையின்றி அம் முயற்சியில் ஈடுபடாதே. அடிப்படை இலக்கணத்தில் நன்கு பயிற்சி பெறு. இலக்கியங் களை ஊன்றிப்படி. பாரதியார், பாரதிதாசன் பாடல்களைத் திரும்பத் திரும்பப்படி. அடிக்கடி எழுதி எழுதிப் பயிற்சி பெறு. எழுதியதை, வல்லார் ஒருவரிடம் காட்டித் திருத்திக் கொள். இவ்வாறு பயிற்சி பெறாமல் மேடை ஏறாதே; இதழ்களுக்கு எழுதாதே; நூல் வெளியிட ஆர்வமுங் கொள்ளாதே. விளையாடக் |