78 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11 |
கூடப் பயிற்சி தேவைப்படுகிறதே. பயிற்சியின்றி விளையாட்டுப் போட்டிகளிற் கலந்து கொள்ள முடியுமா? வீரனாகத் தான் திகழ முடியுமா? தோண்டத் தோண்டத் தானே நீர் ஊற்றெடுக்கிறது? ஓரடி இரண்டடி தோண்டினால் மட்டும் போதுமா? ஆழமாகத் தோண்ட வேண்டுமல்லவா? அது போல ஆழமான பயிற்சியிருந் தாலன்றோ கவிதையும் ஊறும்? புதுமை யென்ற பெயராலே கவிதைக்குத் தீங்கு செய்து விடாதே. புதுமையென்றால் பாடும் பொருள் புதுமையாக இருக் கலாம்; உவமை புதுமையாக இருக்கலாம்; சொல்லும் பாங்கு புதுமையாக இருக்கலாம். சொற்கள் புதுமையாக இருக்கலாம். அஃதாவது ஆக்கச் சொல்லாக இருக்கலாம்; வடிவங்கள் புதுமை யாக இருக்கலாம். இவற்றை விடுத்து, வடிவமே இல்லாமல், இலக்கணமும் இல்லாமல் எதுகை மோனை கூட இல்லாமல் அடிப்படையைத் தகர்த்தெறிவது புதுமையாகாது. ஓவியங்கூட இன்று புதுமையென்ற பெயரால் உருக்குலைந்து கிடக்கிறது. முன்பெல்லாம் உயிரோவியம் என்று கூறுவர். அன்று வரைந்தவை அவ்வாறிருந்தன. இன்று புதுமையின் பெயரால் எழுதப்படுபவை உயிரற்றுக், கைகால்கள் சிதறுண்டு, வெற்றுக் கோடுகளாக் காணக் கிடக்கின்றன. இத்தகு புதுமை நோக்கிச் செல்லும் ஓவியவுலகமும் காவியவுலகமும் எங்கே சென்று முடிவுறு மோ தெரியவில்லை. கவிதையில் நல்ல சொற்களைப் பயன்படுத்து. சிதைந்த சொற்களைப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தாதே. ஓரிரு இடங்களில் அரிதாக வரலாம். கவிதையில் 'நன்மொழி புணர்த்தல்' மிகமிகத் தேவை. அச்சொற்கள் பொருளாழம் உடையனவாக இருத்தல் வேண்டும். பாடலில் இனிய ஓசை அமைதல் வேண்டும். பயில்வார்க்கு இன்பம் தரவேண்டும். சுருக்கமாகச் சொல்லுதல் வேண்டும். சுருங்கக் கூறினும் விளங்கிக் கொள்ளுமாறு சொல்லும் முறை அமைதல் வேண்டும். எதுகை, மோனை முதலிய தொடைகள் அமையப் பாடுதற்குத் தயங்காதே. நம் நாட்டுப் பழமொழிகள் கூட எதுகை, மோனை அமைந்து காணப்படுகின்றன. தாய்மார் பாடும் தாலாட்டுக்கூட எதுகை, மோனை அமைந்து காணப்படுகிறது. நம் தமிழுக்கு இயல்பாக அமைந்த சிறப்பு அது. அச் சிறப்பை நீ கெடுத்து |