விடாதே. அதில் ஓர் இனிமையும் அழகும் உண்டு. பிற மொழி களைப் படித்து விட்டு, அம்மொழிகளின் மரபைப் பின்பற்றாதே. உன் மொழிமரபை அறிந்து அதன்படி நட. அதற்காகத்தான் பயிற்சி வேண்டும் என்று நான் கூறுகிறேன். இலக்கியப் பயிற்சியும் மொழிப் பயிற்சியும் நன்குடையார்க்கே அது நன்கு வாய்க்கப் பெறும். இல்லார்க்கு அஃது எளிதின் அமையாது. அவர்கட்கு எளிதின் கைவரப் பெறாமையால் எதுகை மோனை வேண்டா வெனக் கதைப்பர்; எள்ளி நகையாடவும் செய்வர். அவர்தாம் அரங்கின்றி வட்டாடுவர். நீ அக் கூட்டத்துட் சேர்ந்து விடாதே. மரபுக் கவிதையென்று உன் மடலில் ஓரிடத்துக் குறித்திருந் தாய். அஃது எனக்குப் புதுமையாகவும் வியப்பாகவும் இருந்தது. அவ்வாறானால் மரபு கெட்ட கவிதையென்று ஒன்றுளதா? மரபு அமைந்திருந்தாற்றானே கவிதையெனப்படும். அதுகெடின் கவிதை யெனப்படாதே! பிள்ளை பெற்ற தாய் என எவரும் கூறார். பிள்ளை பெறாத தாயரும் உளரோ? தாய் என்னும் பெயர் பிள்ளை பெற்ற வளுக்குத் தானே உரியது. ஆதலின் இனி, மரபுக் கவிதை யென்று எழுதாதே. கவிதை யென்று மட்டும் எழுது. கவிஞன் என்பவன் சமுதாயத்தின் வழிகாட்டி, குற்றங் குறைகளைச் சுட்டிக் காட்டி இடித்துரைத்துத் திருத்தும் ஆசான். அந்நிலைக்கேற்ப உன் பாடல்கள் அமைய வேண்டும். வெறும் புகழுக்காக -பணத்திற்காக- கவிஞன் எனப் பெயர் பெற வேண்டும் என்னும் ஆவலுக்காகக் கண்டபடி எழுதாதே. ஓர் குறிக்கோள் வேண்டும். கவிஞன் அச்சத்தையும் அடிமை மனப்பான்மையையும் அடியோடு விட்டுவிட வேண்டும். துணிவும் பெருமிதமும் தேவை. பெருமிதம் எவ்வளவு தேவையோ அவ்வளவு அடக்கவுணர்வும் வேண்டும். ஒரு கவிஞன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களைப் போற்றுதல் ஓர் உயரிய பண்பாகும். இதனைப் 'பரம்பரையுணர்வு' என்பர். தன் காலத்தில் வாழும் சான்றோரையும் போற்றும் விரிமனம் வேண்டும். நான் கூறியவற்றை மனத்திற்கொண்டு அவ்வா றொழுகினால் நீயும் உயர் கவிஞனாகலாம். நிலை பேறுடைய படைப்புகளையும் படைக்கலாம். உன் தந்தை முடியரசன் |