பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

16
கவிதை படைப்பதெப்படி?

அன்புள்ள அரசு,

உன் மடல் பெற்றேன். கவிதை எழுத இலக்கணம் வேண்டுமா? என்ற ஐய வினாவொன்றை யெழுப்பி, அதற்கு அமெரிக்க நாட்டறிஞர் கூறியதை மேற்கோள் காட்டியிருந் தாய். நன்று; நன்று! அவர் கூறியதை நன்கு ஊன்றிப் பார்த்தாயா? "இலக்கணத்திற்குக் கட்டுப் பட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்" என்பது அவர் கூற்று. நானும் அதனை ஒப்புக் கொள்ளுகிறேன். இலக்கணத்திற்குக் கவிஞன் கட்டுப்படக் கூடாது. கவிஞனுக்குத்தான் இலக்கணம் கட்டுப்பட வேண்டும் என்பது அதன் கருத்து. இதனை நான் முன்னர் எழுதிய மடலிற் கூறியிருக்கிறேன். அதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ளாது இலக்கணமே வேண்டுவதில்லையென முடிவு கட்டி விட்டாயே!

கவிஞன் எப்படி இலக்கணத்தைத் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்கிறான் என்பதை விளக்கிக் காட்டுகிறேன்.

"நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்"(குறள் - 149)

இக்குறட்பாவில் முதற்சீரில் முதற்சொல் 'நலக்கு' என்பதாகும். இஃது இலக்கண நெறிப்படி வர வேண்டுமானால் 'நலத்துக்கு' என வருதல் வேண்டும். நலம் என்ற மகரவீற்றுச் சொல் நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' என்பதோடு சேருங்கால், அத்துச் சாரியை பெற்று 'நலத்துக்கு' என வருதல் வேண்டும். மனம் + கு மனத்துக்கு என்பதுபோல, இஃது இலக்கண விதி. இவ்விதிப்படி 'நலத்துக் குரியார்' என வந்தால், நான்கசைச்சீர் வெண்பாவுள் வந்து விடும். வெண்பாவுக்குரிய செப்பலோசை கெடும். வள்ளுவர் விதியை முறியடித்தார். இலக்கணத்துக்குக் கட்டுப்படாமல் அதனைத் தாம் கட்டுப் படுத்தி, 'நலக்குரியார்' என அமைத்து