பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்83

இலக்கண அடிப்படை அறிவு கூட இல்லான் கவிபுனைந் தால், கவிஞனாக மேடையேறி விட்டால், அவன் இலக்கணத்தை வெறுக்கத்தானே செய்வான். இவ்வாறு செய்யுள் இலக்கணத் தையும் ஏனை இலக்கணத்தையும் ஐயம் அறப்பயிலாமல், புறக் கணித்து ஒதுக்கி விட்டுக் கவிதை பாட வருவோனுக்கு இரவீந்திர நாத தாகூர் ஓர் அருமையான உவமை கூறுகிறார். "வயது முதிர்ந்த கிழவன் இரண்டாந்தாரத்திடம் அன்பைப் பெற முயல்வது போன்றது சீர், தளை அறியாதவன் கவிபாட முனைவது" என்பது அவர் கூற்று.

ஒருமுறை தாகூர், மதுரைக்கு வருகை புரிந்தார். அவரைக் காணும் பொருட்டு நம் தமிழ் நாட்டுக் கவிஞரொருவர் சென்று தாகூரைப் புகழ்ந்து கவிதை எழுதி அவரிடம் தந்தார். தாகூர், மகிழ்ச்சியும் நன்றியும் மீக்கூர அதை வாங்கிப் படித்தார். கவிதை, ஆங்கில மொழியில் வரையப்பட்டிருந்தது. சிரித்துக் கொண்டே, "குயில் தன்குரலில் பாடினால்தான் நன்றாக இருக்கும்" என்று தாகூர் கூற நம் கவிஞர் நாணிவிட்டார். தாய்மொழி வாயிலாகத் தான் கவிதையை வளர்க்கவேண்டும் என்பது தாகூரின் கருத்து. "வேற்று மொழியினால் கவிதையை வளர்ப்பது காதலியை மணக்க மற்றொருவரை அனுப்புவது போலத்தான்" எனப் பிறிதோரிடத்து தெளிவாகக் கூறியிருக் கிறார் தாகூர்.

ஒரு கவிதை எந்த மொழியில் எழுதப்பட்டதோ அந்த மொழியின் வாயிலாகவே படிப்பதுதான் சிறந்தது. அப்பொழுது தான் கவிஞனுடைய உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உணர்ந்து சுவைக்க முடியும். அதைவிடுத்து மொழி பெயர்த்து அதனைப் படித்தாற் பயனில்லை என்றும் தாகூர் கூறுகிறார்.

"தாய்மொழி வாயிலாகவே கவியின் உள்ளத்தைக் காண முடியும். மற்றமொழியின் வாயிலாகக் கவியின் உள்ளத்தைக் காண முயல்வது, வக்கீலுக்கு வக்காலத்துக் கொடுத்துக் காதலியின் அன்பைப் பெற முயல்வது போன்றது" என்று எள்ளி நகைக்கிறார் தாகூர்.

கவிஞனுக்குக் கவிதையின்பால் ஒருவிதக் காதல் வெறியிருக்க வேண்டும். அதனுடன் ஒன்றி விட வேண்டும். அப்பொழுதுதான் உணர்ச்சிக் கவிதைகள் தோன்றும். இவ்வுண்மையை உணர்ந்த பாரதியார், கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "கவிதை