பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 11

யாம் மணிப்பெயர்க்காதலி" எனவும், "மனைவியாம் கவிதைத் தலைவி"யெனவும் பாடுகிறார். மற்றோரிடத்து இன்னும் அழகாகக் கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

"முன்னிக் கவிதை வெறி மூண்டே நனவழியப்
பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சி"

என்று கவிதை வெறி மூள வேண்டும்; அதனால் நனவழிய வேண்டும்; அஃதாவது தன்னை மறந்த நிலை வரவேண்டும். அப்பொழுதுதான் விழிப்பிலே தோன்றும் கனவு போலக் கவிதை வெளிப்படும் என்கிறார்.

வெறியுணர்வு தோன்ற வேண்டும்; நனவு அழிய வேண்டும் அக்கூட்டுக்களியில் உள்ளம் கனிய வேண்டும்; அக்கனிவிலே கவிதை தானாகவே தோன்றும். இவ்வுண்மையைத் திருநாவுக்கரசர், "உள்ளங் கனிந்த போதெல்லாம் உவந்து உவந்து பாடுதுமே" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்வாறு கவிதை வெறிமூண்டு, நனவழிந்து உளங்கனிந்து பாடும் போதுதான், "மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்" என்று பாரதி பாடினானே அந்தச் சொல்லின்பம் வாய்க்கும். அந்தச் சொல்லின்பம் கொண்ட பாட்டுத் திறத்தாலே தான் வையத்தைப் பாலித்திட முடியும்.

"மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண் டளவிற் பணியச் செய்வாய்"

என்று குமரகுருபரர் கூறியது போல மன்னரையும் பணியச் செய்யும் பண் எப்படியிருத்தல் வேண்டும்? அப்பாடல் மந்திரம் போற் சொல்லின்பம் அமைந்ததாக இருத்தல் வேண்டும். அதனால் நீ பாடும் பொழுது அத்தகு ஆற்றல் மிகு சொல்லின்பம் அமையப் பாடிப்பழகு.

உள்ளத்தில் உணர்ச்சி - கவிதை வெறி பொங்கிக் கொண்டே யிருக்க வேண்டும். அவ்வுணர்ச்சிதான், அவ் வெறிதான் கவிதை களை உந்தி வெளிக் கொணரும். "உணர்ச்சி பொங்கி அடங்கிய பின் ஏற்படும் அமைதியில் திரும்ப அனுபவிக்கப்படும் ஓர் இன்பப் பெருக்கே கவிதை" என 'வேட்சுவர்த்து' என்னும் கவிஞர் பெருமான் குறிப்பிடுகிறார். "மனிதனுடைய உள்ளத்தில் அடிக்கடி தோன்றும்