பக்கம் எண் :

முடியரசன் கடிதங்கள்87

மாத்தவம் என்று கூறவில்லை. மா என்னும் சொல் பெருமை குறிப்பதாக இருந்தால் மாதவம் என ஒற்று மிகாமற்றான் வரும். அதுபோல மாதமிழும் ஒற்று மிகாமல் வரவேண்டும். அடுத்து, "கூறுமாப்போலே" என்னும் இடத்திலும் கூறுமா போலே என ஒற்று மிகாமல் எழுதுதல் வேண்டும். கூறுமாறு போலே என்பதுதான் கூறுமாபோலே எனத்தொக்கு வந்தது.

நூல்களா? நூற்களா?

இனி உன் மடலில் நூற்கள் எனக் குறிப்பிட்டிருந்தாய். நூல்+கள் = நூல்கள் என வரவேண்டுமே தவிர நூற்கள் என வருதல் தவறாகும். வேல்கள், கால்கள், எனக் குறிப்பிடுவரே தவிர, வேற்கள், காற்கள் என எவரும் குறிப்பிடுவதில்லை.

நாள்களா? நாட்களா?

நாட்கள் என்று குறிப்பிடுவது தவறு. நாள்கள் என்றே குறிப் பிடுதல் வேண்டும். தோள்கள் என்பதை தோட்கள் என்றோ, வாள்கள் என்பதை வாட்கள் என்றோ நாம் குறிப்பிடுவதில்லை. நாள்கள் என்றால் பல நாள் என்று பொருள். நாட்கள் என்றால் புதிய கள் என்று பொருள்படும்; நாண்மலர் என்பது போல. ஆகவே நாளின் பன்மை குறிப்பதானால் நாள்கள் என்றே வருதல் வேண்டும். தனிக்குறிலை அடுத்து வரும் லகர, ளகரங்கள் தாம் றகர, டகரங் களாகத் திரியும்; கற்கள், முட்கள் புட்கள் என்பன போல.

நூல், நாள் என்பன பால் பகா அஃறிணைப் பெயர்கள் எனப்படும். அஃதாவது ஒன்றன்பாலா பலவின் பாலா என்று பகுக்க இயலாது. அவை ஒன்றையும் குறிக்கும்; பலவற்றையும் குறிக்கும். ஒரு நூல் பல நூல் என்றும் ஒருநாள் பல நாள் என்றும் கூறுவர். "ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும்" என்ற அவ்வையார் பாடலில் ஒருநாள் என்றும் பலநாள் என்றும் ஒருமையிலும் பன்மை யிலும் வந்துளது. சிலப்பதிகாரம் என்னும் நூல் முத்தமிழ்க் காப்பியம் எனப்படும் என்றவிடத்து, நூல் என்னுஞ்சொல் ஒருமையில் வந்தது. நூல் நிலையம் திறக்கப்பட்டன என்ற விடத்து நூல் என்பது பன்மை பொருளில் வந்தது. பன்மையைக் குறிக்கப் பிற்காலத்தே 'கள்' என்பதைச் சேர்த்தனர். கள் புகுந்தபின்புதான் இந்தக் குழப்பம்.