பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

1
எக்கோவின் காதல்

'ஐயா தபால்!'

விரைந்து வந்து வாங்கினான் எக்கோ. எல்லாக் கடிதங் களையும் படித்துக்கொண்டே வந்தான். ஒரு கடிதத்தை மட்டும் பிரிக்கும் பொழுதே அவன் கண்கள் பளபளவென்று மின்னின. உதடுகள், உள்ளத்திற் பொங்கியெழும் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தன. புருவங்களை நெற்றிமேல் ஏற்றிக் கொண்டு, இமைகளைச் சிமிட்டாமல் படித்தான்.

அன்புடையீர்! வணக்கம். உங்கள் பேனாவிலிருந்து வரும் ஒவ்வொரு மைத்துளியும் உண்டாக்கும் எழுத்து ஒவ்வொன்றும் முதலாளித்துவத்தைச் சிதறடிக்கும் அணுக்குண்டு! உங்கள் பேனா முனை வைதீகத்தின் மார்பைப் பிளந்தெறியும் கூரிய ஈட்டிமுனை! இத்தனை நாள்களாக உங்கள் கட்டுரைகள் தாம் விறுவிறுப்பு வாய்ந்தன என்று எண்ணியிருந்தேன். ஆனால் உங்கள் கதைகளும் அப்படியே இருக்கின்றன. சமுதாயத்தில் நெளிந்து கொண்டிருக்கும் ஊழல்களை அப்படி அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றனவே உங்கள் எழுத்தோவியங்கள். உங்கள் எழுத்துகள் என் உள்ளத்தை ஈர்த்து விடுகின்றன. இந்தத் தடவை வெளிவந்த 'உடைந்த ஓடு' உங்கள் அறிவின் பரப்பையும் அதன் கூர்மையையும் நன்கு புலப் படுத்துகின்றது.

இங்ஙனம்,
உங்களிடம் அன்புள்ள,
மல்லிகா.

இதைப் படித்து முடித்துவிட்டுக் கைகளைத் தலைப் பக்கம் அணையாக வைத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.

எக்கோ 'புரட்சி' என்ற இதழில் அடிக்கடி எழுதி வரும் ஓர் எழுத்தாளன். அவனுடைய கட்டுரைகளும், கதைகளும் உயிரோட்ட