பக்கம் எண் :

114கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

எண்ணமிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந் தான். யாரோ மாடிப்படியில் ஏறிவரும் காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அழகிய இளம் பெண்ணொருத்தி சிரித்த முகத்துடன் வந்து கொண்டிருந்தாள்.

வணக்கம் - என்றாள் வந்தவள்.

பதிலுக்கு வணக்கம் செய்துவிட்டு 'அமருங்கள்' என்று சொல்லி இவனும் அமர்ந்தான்.

அவள் நாற்காலியை இழுத்துக் கொண்டே 'என்னை யாரென்று தெரிகிறதோ' என்றாள்.

'எங்கோ பார்த்த நினைவிருக்கிறது'- என்றான் எக்கோ.

'நான்தான் மல்லிகா' - என்று தானே தன்னை அறிமுகஞ் செய்து கொண்டாள் வந்தவள்.

'ஓ, அப்படியா! ஆம்; இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. நான் உங்கள் கல்லூரியில் பேச வந்த பொழுது முதல் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை நான் கவனித்திருக்கிறேன்' - என்று பழைய நிகழ்ச்சியை நினைவு படுத்திச் சொன்னான் அவன்.

'நீங்கள் தாய்மொழிப் பற்று வேண்டுமென்று அடிக்கடி எழுதி வருகிறீர்களே, 'எக்கோ' என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக் கிறீர்கள்?' என்று ஒரு கேள்வியை எழுப்பினாள்.

'நான் தாய் மொழிப்பற்றில் இளைத்தவனல்லன். என் உண்மைப் பெயர் 'எழிற்கோ' இந்தப் பெயரோடு நான் எழுதி வந்தபொழுது என் எழுத்துகளை மக்கள் வரவேற்கவில்லை; புறக்கணித்தனர்; ஊக்குவிப்பாரும் இல்லை; ஒதுக்கினர். ஒதுங்கியிருக்க என்னால் முடியவில்லை. ஆகவே என் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து 'எக்கோ' எனப்பெயர் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். அதன் பிறகுதான் என் எழுத்துக்கு மதிப்பும் புகழும் கிடைத்தன. மக்கள் மனம் இன்னும் 'அடிமையில் மோகம்' கொண்டுதான் இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது இது. இதை யுணர்ந்துதான் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று கதறியிருக்கிறார் பாரதி '- என்று உணர்ச்சி பொங்க விடையளித்தான் எக்கோ.

அவன் பேச்சிலே சொக்கிப் போயிருந்த மல்லிகா, திடீரென்று எக்கோ பேச்சை நிறுத்தியவுடன் ஒன்றும் பேச முடியாமல் திகைத்து,