பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

மல்லிகா, ஏதோ சில தின்பண்டங்களைக் கொண்டு வந்தாள். 'நல்ல சமயத்தில் வந்தாய் மல்லிகா, அந்த அறையில் அழுது கொண்டிருந்த பெண் யார்?'

'அவள் என் தங்கை'

'அவள் ஏன் அழுதாள்?'

'அவள் வாழ்க்கை, பனிப்படலங்களால் சூழப்பட்ட நடுக்க மயமான துன்ப வாழ்க்கை. அதனால் அவள் அடிக்கடி அப்படி அழுதுகொண்டிருப்பாள்'

'எனக்கொன்றும் விளங்கவில்லையே! உன் தங்கை என்கிறாய்! துன்ப வாழ்க்கை என்கிறாய்! குழப்பமாக இருக்கிறது; சற்று விளங்கச் சொல்'

'அவள் விதவை'

'விதவையா?!' வியப்போடு வெளிவந்தது இந்தச் சொல்.

'ஆம், விதவைதான். எனக்குத் திருமணம் வேண்டாம். படிக்க வேண்டும் என்று நான் சொல்லிவிட்டதால் என் தங்கைக்குத் திருமணம் செய்தார்கள். ஆனால் அவள் கொஞ்ச நாளில் தாலியை இழந்தாள். அதிலிருந்து இப்படித்தான்!'

'தாலி! நல்ல தாலி! அந்த அடிமைக் கயிறு கட்டுவ தாற்றானே எத்துணையோ பெண்கள் விதவை என்ற இழிந்த பெயரைப் பெறுகிறார்கள். மக்கள் புரிந்தோ புரியாமலோ மீண்டும் படுகுழியில் விழுந்துகொண்டும், விழச் செய்து கொண்டும் இருக்கிறார்களே! இவர்கள் கண்கள் என்றுதான் திறக்குமோ!' என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு அவளை நோக்கி 'ஏன் அவளுக்கு மறுமணம் செய்யக் கூடாது' என்றான்.

'செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். பெற்றோர் விரும்பவில்லை. மேலும் அவளும் சரியாக ஒப்புக்கொள்ள வில்லை!'

'பார்த்தாயா, மனித சமுதாயம் எப்படியிருக்கிறதென்று! உன் வீட்டிலேயே ஒருபுறம் துன்பத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு மறுபுறம் விழாக் கொண்டாட நினைக்கிறாய்' என்று வருந்திக் கூறினான்.

'என் பெற்றோர்கூட நான் சொன்னவுடன் ஒப்புக் கொண்டார்கள்; இவள் சரியான உடன்பாடு தெரிவிக்க வில்லையே; அதற்கு நாமென்ன செய்வது?' என்றாள்.