122 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
நீ எப்படி மலர முடியும்? மனக் கோட்டை கட்டுகிறாயா என்ன? வேண்டுமானால் அதோ இருக்கும் விஞ்ஞானியைக் கேள்! அவர் உதவியிருந்தால் ஒருவேளை மலரலாம்' என்று. அதன் அறிவுரைப்படி விஞ்ஞானியை அரும்பு மன்றாடி வேண்டுகிறது. விஞ்ஞானியே! உதவும் உள்ளம் உண்டா உம்மிடம்? ஏன்! வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேனே. அக்கா அடிக்கடி உங்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப் பாள். 'புரட்சி' எந்நேரமும் அவள் கையில் இருக்கும். நான் உங்கள் எழுத்தோவியங்களை ஆர்வத்துடன் படித்து வருவேன். அப்பொழு தெல்லாம் நீங்கள் என் கண்முன் நின்று கொண்டிருப்பீர்கள். கடைசியில் நீங்கள் எழுதிய 'உடைந்த ஓடு' என் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டியது போல் இருந்தது. உடைந்த ஓடாகிய என்னை ஒன்று சேர்த்து உருப்படுத்த உங்களையே அன்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் நீங்களோ உடைந்த ஓட்டைக் கவனியாமல் பொற்பாண்டத்திற்கு மெருகு கொடுத்துக் கொண்டிருக் கிறீர்கள். உடைந்து ஓடாகியது என் குற்றமா? அந்த ஓட்டினை ஒன்றுபடுத்த முடியாவிட்டால் இன்னும் இரண்டு நாட்களில் அந்த ஓடு தெருவில் வண்டியின் சக்கரம் ஏறி நூறு சுக்கலாகக் கிடக்கும். இந்த ஓடு இருந்துதான் என்ன பலன்? இது உண்மை. இங்ஙனம் உடைந்த ஓடு எக்கோ படித்து முடித்தான். ஏதோ சொல்ல முயன்றான். அவன் வாயிலிருந்து எந்தச் சொல்லும் வர மறுத்துவிட்டது. தொண்டை கரகரத்தன. ஆனால் அவன் உள்ளம் மட்டும் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருந்தது. 'நான் இதற்குத்தானா இங்கு வந்தேன்? இதுதான் பொங்கல் விழாவா? நான் காதல் அளவிலேதானா ஒவ்வொருவர் குறையை யும் நிறை செய்யமுடியும்? என் முக்கிய குறிக்கோள் அதுவன்றே. ஏழ்மையை - அதன் பகைமையாகிய சுரண்டல் தன்மையை ஒழித்துக் கட்டுவது தான் என் குறிக்கோள். காதலே குறிக்கோளாக இருந்தாலும் இருவருக்கும் எப்படிக் காதலைப் பகிர்ந்து கொடுக்க முடியும்? ஐயா! என் உள்ளத்தில் வேதனைப் புயலை எழுப்பிவிட்டுச் சென்று விட்டாளே!' இவ்வாறு உழன்று கொண்டிருந்தது அவன் மனம். |