124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
குதிக்கும் பொழுது என் இதயம் பலமாகத் தடுக்கும். அப்பொழுது என் நெஞ்சைப் பிளந்து இதயத்தை எடுத்து நசுக்கிவிடும் ஆற்றல் என்னிடம் இல்லாமற் போய்விடும். போகவே துரோகி - கருங்காலி யாகி விடுவேன்' என்று அவன் உதட்டிலிருந்து சிதறி வந்தன இந்தப் பொறிகள். அப்பொழுது அவன் முகம் கருத்துக் காணப் பட்டது. கண்கள் சிவந்திருந்தன. கண்ணில் ததும்பிக் கொண்டிருந்த நீர், துளியாக அவள் மேல் விழுந்தது. துளி, நெருப்பெனச் சுட்டது. நிமிர்ந்து பார்த்தாள். 'என்ன! இதற்காகவா இப்படிப் பேசுகிறீர்கள்! நான் இளம் பெண்தானே. இயற்கை உணர்ச்சியின் வயமாகிவிட்டேன். இதனால் புரட்சி மனப்பான்மை குன்றியா போய்விடும். ஒரு நாளும் என்னை அப்படி எண்ணாதீர்கள், என்னையும் ஒரு 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக்கொள்ளுங்கள்.' பேசிக் கொண்டிருக்கும் பொழுது கீழே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள். 'எக்கோ இங்குதானே இருக்கிறார்?' என்று வந்தவர் கேட்டார். இது எக்கோவின் காதிலும் விழுந்தது. 'யார் இங்கே வந்து, இந்நேரத்தில் என் பெயரைச் சொல்வது!' என்று சொல்லிக் கொண்டே விரைவாகக் கீழே இறங்கி வந்தான். வந்து பார்த்ததும் திடுக்கிட்டான். அவர்கள் போலீசு உடையில் வந்திருந்தார்கள். எக்கோவைத் தொடர்ந்து வந்த மல்லிகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய பெற்றோர் என்ன நடக்குமோ என்று மலைத்து நின்று விட்டனர். 'ஏன் என்னைத் தேடுகிறீர்கள்?' என்றான் எக்கோ. 'உங்களைக் கைது செய்ய உத்தரவு வந்திருக்கிறது' என்று கூறினார் போலீசுத் தலைமை அதிகாரி. 'காரணம்?' 'நீங்கள் 'புரட்சி' என்ற பத்திரிகையில் எழுதிய 'சுடுகாட்டிலே' என்ற கட்டுரை அரசாங்கத்திற்கு முரணானது. அதனால் உடனே கைது செய்யும்படி உத்தரவு வந்துள்ளது' என்று அரசாங்க ஆணை யை நீட்டினார். அதைப் பார்த்துவிட்டு, 'ஓ, அப்படியா! தயார், புறப் படுங்கள், வருகிறேன்' என்று புறப்பட்டான். |