மல்லிகா ஓவென்று அலறி விட்டாள். 'ஐயோ! இப்பொழுது தானே என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தீர்கள்; அதன்படி ஆகிவிட்டதே!' என்று ஓடிவந்து அவன் மார்பிற் சாய்ந்து கொண்டு அலறினாள். அவன் அன்போடு அவளை அணைத்துக் கொண்டான். அவன் தலைமயிர் நெற்றியில் விழுந்து கிடந்தது. அவன் கண்கள் ஒளி மங்கியிருந்தன. 'பாவம், சிறு பெண்! என் காதல் இன்பத்தைப் பெற நினைத்தாள்; அதை இழந்தாள், அதனோடு என்னையும் இழக்கிறாள். அவள் உள்ளம் புண்ணாகத்தானே செய்யும்' என்று எண்ணிக் கொண்டவன் போல் 'மல்லிகா' என்று அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்து உயர்த்தினான். அந்த நிலையைக் கண்ட அதிகாரியே மனந்தாளாமல் வருத்தத்துடன் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு நின்றார். எக்கோ போலீசுச் சேவகனைப் பார்த்தான். சிவப்புத் தொப்பி அவன் கண்களில் பட்டது. சிவப்பு வர வரப் பெரிதாகத் தோன்றியது. அதைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் விரிந்தன. தலையை நிமிர்த்தான். அங்கிருந்து ஏதோ ஓர் ஒளி வந்து தாக்கியது. அவன் மார்பில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல் இருந்தது. உடனே மல்லிகாவைத் தள்ளி நிறுத்தினான். 'மல்லிகா! நான் யார், நீ யார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வெறுங்காதலராக மட்டுமிருந்தால் நாம் விளையாட்டுப் பொம்மைகளாகக் காலத்தைக் கடத்திவிடலாம். ஆனால் கொள்கைக் காக - இலட்சியத்திற்காக ஒன்று சேர்ந்திருக் கிறோம். இதை நினைவில் வைத்துக் கொள்! இனிமேற்றான் நமக்குப் பொங்கல் விழா வரப் போகிறது என்பதை அறிவிக்கும் அறிகுறி இது' என்று உணர்ச்சியுடன் சொன்னான். 'நான் இப்படியாகுமென்று கனவிலும் நினைக்கவில்லை. நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வந்து விடக்கூடாதா' என்று கெஞ்சினாள். 'மன்னிப்பு! நான் யாரிடம் மன்னிப்புக் கோருவது? என்ன குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்பது? எழுத்துரிமை - பேச்சுரிமை இவற்றைப் பறிக்கும் எதேச்சாதிகாரிகளிடமா மன்னிப்புக் கேட்பது? நான் மன்னிப்புக் கேட்டால், 'எழுத்தில் வீரத்தைக் காட்டிச் செயலில் பின்வாங்கும் துரோகி, மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன்' என்று என்னைத் தூற்றுவார்கள்; மல்லிகாவும் கோழையின் மனைவி |