128 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
இன்னும் கொலைத் தண்டனை பெறுவதற்குங்கூட ஆயத்தமாக இருக்கிறார். அதை நீங்கள் உணரவேண்டும். உணராவிட்டால் அவர் செய்த தியாகம் விழலுக்கிறைத்த நீராகும். நீங்கள் என்றுமே அடிமையாக வாழப்போகிறீர்களா? நீங்கள் அவ்வாறு வாழ்ந்தது மன்றி உங்கள் பரம்பரையையும் அடிமையாக்கவே எண்ணிவீட்டீர் களா? என்ன சொல்லுகிறீர்கள்? ஒவ்வொரு நாட்டையும் பாருங்கள்! அதைப் பார்த்த பிறகும் நாம் உணர்வற்றவர்களாக இருப்பது அழகா? நீங்கள் நினைத்தால் - ஒன்றுபட்டால் எக்கோவை வெளிக் கொணரலாம். ஏன்? நாட்டையே எதேச்சாதிகாரத்தின் பிடியி லிருந்து விடுவிக்க முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவரைத் தோழர் என்று எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி குருதியோடு கலந்து விட்டால் மக்கள் துன்பம் உங்கள் துன்பமாகத் தோன்றும். சிதைந்து கிடக்கும் நீங்கள் சீறி எழுவீர்கள். அந்தச் சீற்றத்திற்கு முன் துப்பாக்கிகள் என்ன செய்ய முடியும்? 'நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும். அவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரிய வேண்டும். அதற்காக நான் பலியாக வேண்டும்' - இதுதான் எக்கோவின் காதல். அவர் காதலை நீங்கள் தான் ... என்று பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் அதிகாரி ஒருவர் வந்து மல்லிகாவின் கையில் ஒரு கடிதத்தை நீட்டினார். மல்லிகா அதைப் படித்து விட்டுக் 'கூட்டத் தைக் கலைக்க முடியாது; மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று மீண்டும் பேசத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் 'டுமீல்!டுமீல்!' என்று சத்தங்கள் கேட்டன. கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. சிதறிச் சென்றனர் மக்கள். ஆனால் ஒரு சிலர் கலைய மறுத்தனர். கண்ணீர்ப் புகை பயன் படுத்தப்பட்டது. மக்கள் திக்குமுக்காடினர். போலீசாரின் கைத் தடிகள் சுழலத் தொடங்கின. குதிரை வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அடி பொறுக்க முடியாமல் மக்கள் சிதறுண்டு ஓடினர். சிலர் அடிபட்டு விழுந்தனர். சிலர் மேடையில் ஏறினர். அங்கும் தடியடி. பலருக்குப் பலத்த காயம். மேடையில் ஏற்பட்ட நெருக்கத்தால் மல்லிகாவின் அருகிலிருந்த மஞ்சுளா கீழே விழுந்து விட்டாள். தடுமாறிக் கொண்டு எழுந்து நின்றாள். தலையில் பலத்த அடி விழுந்தது. கீழே சாய்ந்து விட்டாள். |