பக்கம் எண் :

130கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

2
அத்தை வீட்டில் பேய்!

'போங்களத்தான்! எப்பொழுது பார்த்தாலும் உங்களுக்குக் கேலிதான். இனிமேல் என்ன கேட்டாலும் நான் கொண்டு வந்து தரமாட்டேன் போங்கள்!' என்று அன்பும் நாணமும் கலந்த - கொஞ்சுங் குரலில் கூறிவிட்டு ஓடிவிட்டாள் ஊர்மிளா.

ஊர்மிளா என் அத்தை மகள். படித்துக் கொண்டிருக் கிறாள். 'பச்சைக்கிளி என்றால் பச்சைக்கிளியேதான்' மங்கைப் பருவம் தன் வருகையை எப்படி எப்படித் தெரிவிக்க வேண்டுமோ அப்படி யெல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்த மையால் அழகு பூரித்து வளர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு அழகுள்ள அவளுக்குக் கூந்தல் மட்டும் கொஞ்சம் நீளத்தில் குறைவாகவே இருந்தது. அந்த ஒரு குறையைத் தவிர அழகிலும் குணத்திலும் வேறு குறை காண முடியாது. அந்தக் குறைகூட இந்தக் காலத்தில் 'பாஷன்' என்றாலும், தமிழ் இலக்கியங்களில் படித்தபடி பெண்களுக்குக் கூந்தல் அடர்ந்து நீண்டு இருக்க வேண்டுமென்பது என் ஆசை. தாழ்குழல் - தோகை போன்ற குழல் என்றெல்லாம் வருணிக்கப்பட்டிருப்பதைப் படித்த எனக்கு அது குறையாகத் தோன்றியதில் வியப்பில்லை. இருந்தாலும் ஏனைய நிறைவுகள் அந்தக் குறையை மறைத்து விட்டன.

ஊர்மிளாவின் தாய் என் தகப்பனாருடன் பிறந்த அத்தை. வாழ்க்கைப்பட்ட இடம் பெரிய இடம். பல வேலி நிலங்கள் உண்டு. வீடு வாசல், சொத்து சுகம் எல்லாம் நிறைந்த இடம். அவ்வளவு பெரிய இடத்தில் வாழ்க்கைப் பட்டிருந்தாலும் தன் மகளை எனக்கே கொடுக்க வேண்டும் என்பது என் அத்தையின் ஆசை.

எனக்கும் அங்கேயே மணஞ் செய்து கொள்ள வேண்டு மென்றுதான் விருப்பம்; பணத்துக்கு ஆசைப்பட்டன்று; ஊர் மிளாவின் உள்ளமும் உடலும் என்னை அந்த உறுதிக்குக் கொண்டு வந்தன.