பக்கம் எண் :

எக்கோவின் காதல்131

வழக்கம் போல இந்தத் தடவையும் முதற்பருவ விடு முறைக்கு அத்தை வீட்டிற்கு வந்திருந்தேன்.

'ஊர்மிளா! கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வா!' என்றேன்.

'நான்தான் இனிமேல் கொண்டுவர முடியாது என்று சொல்லி விட்டேனே; நான் கொண்டு வரவே மாட்டேன்' என்றாள் அவள்.

'சீ! கழுதை! கேட்டால் கொடுத்தால் என்னவாம் மாட்டேன் என்றா சொல்வது? இதுவா மரியாதை?' என்று எனக்காகப் பரிந்து பேசினாள் என் அத்தை.

'இல்லம்மா! அத்தான் சும்மா சும்மா கேலி பண்ணுதம்மா'

'கேலி செய்தால் என்ன! அத்தான் தானே, போம்மா போ! தண்ணீர் கொண்டு போய்க் கொடு'

தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து தந்தாள்.

வாங்கிக் கொண்டே 'திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படியெல்லாம் மாட்டேன் என்று சொல்ல முடியுமோ?' என்றேன்.

'பாரும்மா' என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

'அத்தை! உன் பெண் என் வீட்டிற்கு வந்த பிறகு ஊர்மிளா என்ற பெயரை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்துக் கொள்ளப் போகிறேன்'

'அத்தான்! தமிழ்ப் பண்டிதர் குணத்தைக் காட்டி விட்டீர் களே' என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே உள் நுழைந்தான் முருகன் - ஊர்மிளாவின் உடன் பிறந்தான்.

'ஆம் அப்பா! உங்கள் சொந்த மொழியில் பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னால் அது இழிவாகத்தான் தோன்றும்'

'விளையாட்டுக்குச் சொன்னேன் அத்தான். கோபித்துக் கொள்ளாதீர்கள். எழுந்திருங்கள், சாப்பிடலாம்'

உணவை முடித்துக் கொண்டு பலவாறு பேசிக் கொண் டிருந்து விட்டு உறங்கச் சென்றேன்.

இரவு மாடியில் படுத்திருந்தேன். மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எனக்கு உறக்கமே வரவில்லை. பல வகையான எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன.