பக்கம் எண் :

எக்கோவின் காதல்133

'முருகா! உனக்கு எப்போதும் விளையாட்டுத்தான். நான் நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன். நீ - என்னவோ - சொல்லுகிறாயே!'

'சரி அத்தான், உடனே விளக்கைப் போட்டுப் பார்த்தீர்களா?'

'விளக்கைப் ..... போடவில்லை ... அதை எதற்கு நாம் அவ்வளவு கவனிக்க வேண்டும் என்று பேசாமல் வந்து விட்டேன்'

'அத்தான்! அப்படியானால் அது உறுதியாகப் பேயில்லை. எதையோ பார்த்திருக்கிறீர்கள். இருட்டானதால் அது உங்கள் கண்ணுக்குப் பேய் போலத் தோன்றியிருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாருங்கள்'

'அது என்ன?' - என்று வாங்கிப் படித்தேன்.

'' திருஷ்டாந்தரமாக, பேய் பிடித்த வீட்டின் சம்பவ மொன்றை எடுத்துக் கொள்வோம். பாதி இரவில் ஒரு சப்தம் கேட்டதாக இருக்கட்டும். இந்தச் சப்தம் யாரால் வந்தது? சாதாரணமாகக் காற்றால் சப்தம் உண்டாகியிருக்கலாம். அல்லது ஏதாவது சாமான் விழுந்ததால் உண்டாகியிருக்கலாம். அல்லது சப்தம் கேட்பது போல் எண்ணியுமிருக்கலாம். அல்லது காதின் பலவீனத்தால் சப்தத்தைக் கேட்ட மாதிரியிருக்கலாம். இத்யாதி காரணங்களால் சப்தம் என்ற சம்பவம் உண்டாவது சகஜம்... சப்தம் உண்டான காரணம் தெரியாதபடியால் பழக்க வாசனையால் அந்தச் சப்தம் தெய்வத்தாலோ, பேயாலோ, பிசாசாலோ உண்டாயிற்றென்று தீர்மானிக்கிறோம்...."

'இது என்ன பத்திரிகை? .... சரிசரி! 'திராவிட நாடா' நீ எப்போ இதிலே சேர்ந்தாய்? இந்தக் கூட்டத்திலே சேர்ந்த நீ எங்கே பேய் பிசாசை நம்பப் போகிறாய்?'

'அத்தான்! சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குகிறது என்று பூரணமாக நம்பும் பண்டிதர் கூட்டத்தைச் சேர்ந்த நீங்கள் எங்கே நான் சொல்வதை நம்பப் போகிறீர்கள்!'

'சரி தம்பி! நேரமாகிறது, காப்பி சாப்பிட எழுந்திரு! அவன் அப்படித்தான் குறும்பாகப் பேசுவான். சாமியே இல்லை என்று சொல்கிறவர்களோடு கொஞ்ச நாளாய்ச் சேர்ந்திருக்கிறான்' என்று சொல்லி, என் அத்தை எங்கள் வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.