பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12

அன்று, இரவு வண்டிக்குப் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

மூன்று மாதங்களை எண்ணிக்கொண்டேயிருந்தேன். இரண் டாம் பருவ விடுமுறையும் வந்தது. அத்தையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். ஊர்மிளாவைக் காண ஆவலோடு வந்தேன். அவளைக் காண முடியவில்லை. பாவாடை, தாவணியைத் தாங்கியிருந் தாலல்லவா அவளைப் பார்க்க முடியும். அவள் பருவநிலை, சேலைக்கு உறைவிடமாயிருந்தது. சமயற் கட்டில் அவள் அங்கு மிங்கும் செல்லும் பொழுது அரைகுறையாகப் பார்த்துக் கொண்டேன். அவ்வளவுதான். அவளும் சில வேளை, சாளரத்தின் வழியே சந்திரனைக் காட்டுவாள். நான் பார்த்து விட்டால் சட்டென்று சந்திரன் மறைந்துவிடும்.

அன்று மாலை அத்தை, கோவிலுக்குச் சென்று விட்டார்கள். மாமாவும் முருகனுங் கூட இல்லை. நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று சமையற்கட்டுள் நுழைந்தேன்.

'ஐயையோ' - என்று சொல்லிக் கொண்டே ஓடி மறைந்தாள் கதவின் பின்புறம்.

கதவை இழுத்தேன்.

கைத்தாமரையால் முகத்தாமரையை மூடிக் கொண்டாள். தாமரையை வலியமலரச் செய்தன என் கைகள்.

'அம்மா வந்து விடுவார்கள், போங்கள்' என்று அவள் கூறும்போது அந்தக் குரலில் கோபம், நாணம், அச்சம், அன்பு எல்லாங் குழைந்திருந்தன.

'ஊர்மிளா' என்று தளர்ந்த குரலில் அழைத்தேன். என் குரலில் கரகரப்பும் கலந்திருந்தது.

'அத்தான்! - என்றாள். பாதாளத்திலிருந்து பெரு மூச்சுடன் வெளிவந்தது அந்த ஒலி. அவள் நிமிர்ந்து என்னைப் பார்க்கும் பொழுது அந்தக் கண்கள் என்ன என்னவோ பேசின. நீர்நிறைந்த பார்வை.

இருவரிடையேயும் அமைதி.

'என்னை மணப்பதில் தடையில்லையே? விருப்பந் தானே?' என்றேன்.

'இல்லை என்று ஒருவரிடமும் சொல்லவில்லையே'