138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 12 |
கேவலமான தொழிலா? கள்ள மார்க்கெட்டு - இலஞ்சம் - குடிகெடுத்துக் குபேரனாவது - இவற்றையெல்லாம் உயர்வாகக் கருதுகிறார்களோ? ஆம், பணந்தானே உயர்வு தாழ்வைப் படைக் கிறது. அஃது எந்த வழியால் வந்தாலென்ன! பணம் இல்லாத காரணத்தால் பாவம் 'தமிழ் வாத்தியார்' இவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான். போகட்டும். இவ்வளவு தாழ்வாக என்னைக் கருதும்போது எனக்கு இங்கென்ன வேலை? என்று ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்குப் புறப்பட்டு விட்டேன். 'ரயிலி'ல் வரும்பொழுதுதான் ஊர்மிளாவின் நினைவே வந்தது. அடடா! அவளிடங்கூடச் சொல்லிக் கொள்ளாமல் வந்து விட்டோமே என்று வருத்தப் பட்டேன். ***** ஆறு ஏழு மாதங்களாக நான் அங்கே போவதில்லை. ஒருநாள் திருமண அழைப்பு வந்தது. திருமண அழைப்பைப் பிரித்துப் பார்த்தேன். ஊர்மிளாவிற்கும் உலகநாதனுக்கும் திருமணம் என்றிருந்தது. என் சீற்றத்தைக் கையிலிருந்த அழைப்பிதழில் காட்டினேன். "ஊர்மிளா! என்னை ஏமாற்றி விட்டாய்! அன்று இரவில் கூறியதெல்லாம் பொய்தானா? அவ்வளவும் உண்மை என்று நம்பி விட்டேன். 'உங்களுக்குத்தான் என் உயிர் உடல் அனைத்தும் சொந்தம்' என்று கூறினாயே! இன்று உலகநாதனுக்கு உல்லாசப் பொருளாகப் போகிறாய்! அன்று பெருச்சாளியைப் பேய் என்று எண்ணினேன். ஆனால் அது தவறு. பெண்ணுருக்கொண்ட பேய் நீதான். என் வாழ்வு முழுதும் ஆட்டி வைக்கும் பேயாகிவிட்டாய்" என்றெல்லாம் திட்டினேன். திட்டி என்ன செய்வது; அவள் தகப்பன் பணஆசை பிடித்தவன். அதனால் அப்படிச் செய்து விட்டான். அதற்கு அவள் என்ன செய்வாள். அவன் அப்படியிருந்தாலும் அவள் ஏன் உடன்பட வேண்டும்? இப்படியெல்லாம் உழன்றது என் மனம். ***** திருமண நாள் நெருங்கிவிட்டது. நாளை எண்ணிப் பார்த்தேன். நாளைக் காலைதான் திருமணம். அவள் மணக்கோலம் என் |